காவிரி மேலாண்மை ஆணையம்; ஒழுங்காற்று குழு தமிழக பிரதிநிதிகளாக 2 பேர் நியமனம்


காவிரி மேலாண்மை ஆணையம்; ஒழுங்காற்று குழு தமிழக பிரதிநிதிகளாக 2 பேர் நியமனம்
x
தினத்தந்தி 2 Jun 2018 11:00 PM GMT (Updated: 2 Jun 2018 10:29 PM GMT)

தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு 2 உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் ஒருவரும், 2 முழுநேர உறுப்பினர்களும், 6 பகுதிநேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதில் தலைவரையும், 2 முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 2 பகுதிநேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். மீதம் உள்ள 4 பகுதி நேர உறுப்பினர்களை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தலா ஒருவர் வீதம் பரிந்துரைக்க வேண்டும்.

அதைப்போல காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவில் காவிரி மேலாண்மை ஆணைய முழுநேர உறுப்பினர் (நீர்வளம்) தலைவராக இருப்பார். காவிரி மேலாண்மை ஆணைய செயலாளர், உறுப்பினர்செயலாளராக இருப்பார். இவர்கள் தவிர 7 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த 7 பேரில் 3 பேரை மத்திய அரசு நியமிக்கும்.

அதாவது, இணைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள வானிலை ஆராய்ச்சித்துறை அதிகாரி ஒருவர், தலைமை என்ஜினீயர் அந்தஸ்துக்கு குறையாத மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர், கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத விவசாயிகள் நல அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் ஆகிய 3 பேரும் மத்திய அரசு சார்பில் உறுப்பினர்களாக இருப்பர். மீதம் உள்ள 4 உறுப்பினர்களை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தலா ஒருவர் வீதம் பரிந்துரை செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகிய 2 அமைப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று தனித்தனியாக கடிதம் அனுப்பினார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக பணியாற்ற நீர்வளத்துறையை கவனிக்கும் நிர்வாக செயலாளர் ஒருவரின் பெயரையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உறுப்பினராக பணியாற்ற தலைமை என்ஜினீயர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரின் பெயரையும் உடனே தெரிவிக்குமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உறுப்பினர்களின் பெயரை அறிவித்தது. இதைப்போல மற்ற 3 மாநிலங்களும் உறுப்பினர்களின் பெயரை அறிவித்தவுடன் காவிரி மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்படும்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி மறுசீரமைப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி நீர் மேலாண்மை திட்டம் 2018 தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டதைத் தொடர்ந்தும், மத்திய நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி மறுசீரமைப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுப்பணித் துறையின் முதன்மைச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறையின் நிர்வாக செயலாளரான (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமாரை காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story