ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு


ஜாமீனில்  வெளிவந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு
x
தினத்தந்தி 2 July 2018 7:02 AM GMT (Updated: 2 July 2018 8:22 AM GMT)

ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி பினு தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு அருகே வடக்குமலையம்பாக்கத்தில் பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்த, 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பியோடிய ரவுடி பினு, போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து பிப்ரவரி 13 -ஆம் தேதி அம்பத்தூர் போலீசாரிடம் சரணடைந்தார்.

இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பினு, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிற ரவுடிகளால் ஆபத்து நேரிடும் என கருதி வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், பினுவுக்கு கடந்த 23 ஆம் தேதி ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியதையடுத்து, சிறையில் இருந்து பினு வெளியே வந்தார். 

ஆனால், சிறையில் இருந்து வெளிவந்தது முதல் இன்று வரை ரவுடி பினு மாங்காடு காவல்நிலையத்துக்கு கையெழுத்து போட வரவில்லை. இதையடுத்து, ரவுடி பினு தலைமறைவு ஆகியுள்ளதாக  என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பினு தலைமறைவாகியுள்ளதையடுத்து, நீதிமன்றத்தில் முறையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Next Story