மறைமலை நகரில் ரூ.75 கோடியில் மூன்றடுக்கு உணவு கிடங்கு வளாகம் கட்டப்படும் -முதல்வர் பழனிசாமி


மறைமலை நகரில் ரூ.75 கோடியில் மூன்றடுக்கு உணவு கிடங்கு வளாகம் கட்டப்படும் -முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 5 July 2018 7:30 AM GMT (Updated: 5 July 2018 7:30 AM GMT)

மறைமலை நகரில் ரூ.75 கோடியில் மூன்றடுக்கு உணவு கிடங்கு வளாகம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #EdappadiPalaniswami #TNAssembly


சென்னை

சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி அதன் விவரம் வருமாறு:-

1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1,367 விடுதிகளில், தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு ஏற்கனவே அறையில் அமைக்கப் பெற்றிருக்கும் ஆர்.சி. அலமாரிகளுக்கு, மாணாக்கர் எண்ணிக்கைக்கேற்ப, தனித்தனி இரும்புக் கதவு மற்றும் பூட்டு சாவி ஏற்பாடுகளுடன் கூடிய வசதிகளை ஏற்படுத்தி தர விடுதி ஒன்றிற்கு 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 27 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரும்பு அலமாரிகள் நடப்பாண்டில் அமைக்கப்படும்.

2. திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பழங்குடி இன மக்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 வீடுகள் வீதம் மொத்தம் 250 வீடுகள் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட, திறனுக்கு ஏற்ப தொழில் துவங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நபர்களை கொண்ட 5 குழுக்களை அமைத்து, ஒரு குழுவிற்கு 10 லட்சம் ரூபாய் வீதம், 25 குழுக்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

1. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சென்னை தெற்கு மண்டலத்திலுள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், தேவையின் அடிப்படையிலும், புறநகர் பகுதியான மறைமலை நகரில், நவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திர பயன்பாட்டுடன் கூடிய மூன்றடுக்கு கிடங்கு வளாகம் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொள்ளாச்சி, திருவாரூர், தாழையூத்து ஆகிய இடங்களில் உள்ள நவீன அரிசி ஆலை வளாகங்களில் தலா 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் நவீன தொழில்நுட்ப நெல் சேமிப்பு கலன்கள், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

3. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் நவீன இயந்திரங்களான Forklift, Stacker cum loader, Automatic Weighing and Packing Machine நிறுவி தானியங்கி கிடங்குகளாக, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.

4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 300 சொந்த கிடங்கு கட்டடங்களில் உள்ள கல்நார் கூரை தகடுகளை அகற்றி, நவீன கூரை அமைப்பான, வர்ணம் தீட்டப்பட்ட, ஸ்திர தன்மை கொண்ட துருப்பிடிக்காத இரும்பு கூரை வசதி, நடப்பாண்டில் 100 கிடங்குகளில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

5. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெருவளாக சேமிப்பு கிடங்குகளில் முன்னுரிமை அடிப்படையில், இன்றியமையாத தேவைகளான சாலை வசதி, நீர்வடிகால் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த சுமைதூக்குவோர் அறைகள், குடிநீர் வசதி மற்றும் மின் ஆக்கி  நிறுவுதல் போன்ற பணிகள், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதை இம்மான்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுறவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்துவதிலும், முன்னேற்றம் அடையச் செய்வதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

6. நடப்பாண்டில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி உதவியுடன் 117 இடங்களில் 26 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.

7. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளை நவீனமயமாக்கும் முயற்சியில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி உதவியுடன் 94 இடங்களில் 9 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

8. கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வங்கிச் சேவையினை வழங்கும் பொருட்டு மத்தியக் கூட்டுறவு வங்கியின் 14 புதிய கிளைகள், 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் துவக்கப்படும்.

9. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உரக் கிடங்குகள், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி உதவியுடன் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை இம்மான்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்


Next Story