கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ.7¼ லட்சம் தங்கம் கடத்தல்


கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ.7¼ லட்சம் தங்கம் கடத்தல்
x
தினத்தந்தி 6 July 2018 11:30 PM GMT (Updated: 6 July 2018 11:29 PM GMT)

கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் ரூ.7¼ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்த இலங்கை பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று பெண் அதிகாரிகளை வைத்து சோதனை செய்தனர்.

ரூ.7¼ லட்சம் தங்க நகைகள்

அதில் அவரது உள்ளாடைக்குள் 4 காப்புகள், 1 மோதிரம் மற்றும் ஒரு சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் எடை கொண்ட ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நகை கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பாக பிடிபட்ட இலங்கை பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story