கருணாநிதி நினைவிடத்துக்கு 1.72 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கியது


கருணாநிதி நினைவிடத்துக்கு 1.72 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கியது
x
தினத்தந்தி 8 Aug 2018 9:53 PM GMT (Updated: 8 Aug 2018 9:53 PM GMT)

திமுக் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு 1.72 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கியது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் அருகே, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. இதனால், கருணாநிதியின் நினைவிடத்துக்கு தமிழக அரசு 1.72 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். கருணாநிதியின் சமாதி அமையும் இடத்துக்கான திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டது.

நேற்று காலை 11.30 மணியளவில் அண்ணா சமாதியின் பின்புறத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்ட தொடங்கினர். 10 அடி நீளம், 7 அடி அகலம், 6 அடி உயரத்திற்கு செவ்வக வடிவில் பள்ளம் தோண்டப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வருவாய்த்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு மேற்பார்வை செய்தது.

தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஜெ.அன்பழகன், எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோரும் இந்த பணியை மேற்பார்வையிட்டனர். இந்த பணி மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது.


Next Story