நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு


நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 24 Sep 2018 12:15 AM GMT (Updated: 23 Sep 2018 10:58 PM GMT)

முதல்-அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பூந்தமல்லி,

திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் நடிகர் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.

கடந்த 16-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவரை காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் கருணாஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணாஸ் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து முதல்-அமைச்சர், போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே கருணாசை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் சில கட்சி தலைவர்கள் கருணாஸ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசியதற்காக கருணாஸ் வருத்தம் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கடந்த 2 நாட்களாக பரவியது. இந்நிலையில் நேற்று அதிகாலை திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் செல்வநாகரத்தினம், உதவி கமிஷனர்கள் முத்துவேல் பாண்டியன், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருணாசின் வீட்டை திடீரென சுற்றி குவிக்கப்பட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது அமைப்பினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சுமார் 5.20 மணிக்கு கருணாசின் வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய வழக்கில் கைது செய்ய இருப்பதாக கருணாசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கருணாசை கைது செய்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அவருடைய வீட்டில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிர்வாகி செல்வநாயகமும் கைது செய்யப்பட்டார்.

அப்போது கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒரு எம்.எல்.ஏ.வை கைது செய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி சபாநாயகரிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். என்னை கைது செய்ய போலீசாருக்கு, அரசு அனுமதி அளித்துள்ளதா? என்று எனக்கு தெரியாது. மேடையில் பேசிய பேச்சுக்காக கொலை முயற்சி வழக்கு போடக்கூடிய அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.

இந்த அரசு தொடர்ந்து திட்டமிட்டு பேச்சுரிமையை தடுத்து எங்களை போன்றவர்களை கைது செய்து வருகிறது. துப்பாக்கியை காட்டினாலும் நெஞ்சை நிமிர்த்து காட்டும் சீவலப்பேரி பாண்டி வாரிசு வம்சாவளியில் நாங்கள் வந்தவர்கள். சிறைச்சாலைகள் எங்களுக்காக தான் கட்டப்பட்டுள்ளது. சட்டத்தை நாங்கள் மதிப்பவர்கள். ஜனநாயக ரீதியாக கோர்ட்டில் இந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருணாஸ், செல்வநாயகத்தை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்துக்குள் வெளியாட்கள் யாரும் வராதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாயில்கள் மூடப்பட்டு இருந்தது. போலீஸ் நிலையம் முன்பும் கருணாசின் ஆதரவாளர்கள் திரண்டு நின்றனர்.

பின்னர் கருணாஸ், செல்வநாயகம் ஆகியோரை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிவடைந்த நிலையில் எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள 13-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கில் முகாந்திரம் இல்லாததால் அந்த வழக்கு பிரிவை மட்டும் நீக்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 வழக்கு பிரிவுகளில் அக்டோபர் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கருணாசை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர், “இந்த அரசு பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு போட்டுள்ளது. என் மேல் போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை மாஜிஸ்திரேட்டு ஏற்க மறுத்துவிட்டார். இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் கருணாஸ், செல்வநாயகம் ஆகியோரை போலீசார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். பாதுகாப்பு கருதி நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு கருணாஸ் கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டார். செல்வநாயகம் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து சென்னையில் சில இடங்களில் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். கலவரத்தை தூண்டும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் மீதும், அச்சக உரிமையாளர் மீதும் போரூர், விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story