கார் விபத்தில் ஜெர்மனி வாலிபர் பலி இந்திய வம்சாவளி பெற்றோருக்கு ரூ.1.80 கோடி இழப்பீடு


கார் விபத்தில் ஜெர்மனி வாலிபர் பலி இந்திய வம்சாவளி பெற்றோருக்கு ரூ.1.80 கோடி இழப்பீடு
x
தினத்தந்தி 24 Sep 2018 9:30 PM GMT (Updated: 24 Sep 2018 8:48 PM GMT)

விபத்தில் பலியான ஜெர்மனி வாலிபரின் பெற்றோருக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

ஜெர்மனி நாட்டில் குடியுரிமை பெற்று குடும்பத்துடன் வசித்து வருபவர் தமிழகத்தை சேர்ந்த லோகநாதன். இவரது மனைவி வினோபாய் லோகநாதன். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்களின் மகன் செல்வகுமார் (வயது 29).

இவர் ஜெர்மனியில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு உறவினர்களை பார்க்க தமிழகத்துக்கு செல்வகுமார் வந்தார்.

அதே ஆண்டு நவம்பர் 21-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்வகுமார் பலியானார்.

இழப்பீடு வேண்டும்

இதையடுத்து, அவரது பெற்றோர், விபத்தை ஏற்படுத்திய லாரி காப்பீடு செய்திருந்த ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் தலைமை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.செல்வகுமார் வழக்கை நிரந்தர ‘லோக் அதாலத்துக்கு’ அனுப்பி, இருதரப்பினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வுகாண பரிந்துரை செய்தார்.

ரூ.1.80 கோடி

அதன்படி, நடந்த பேச்சுவார்த்தையில், விபத்தில் பலியான செல்வகுமாரின் பெற்றோருக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆர்.செல்வகுமார், ‘இந்த இழப்பீட்டு தொகையை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும்’ என்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை லோகநாதன், வினோபாய் லோகநாதன் ஆகியோரிடம் நேற்று நீதிபதி ஆர்.செல்வகுமார் வழங்கினார்.

Next Story