டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது


டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 25 Sep 2018 12:15 AM GMT (Updated: 24 Sep 2018 11:26 PM GMT)

டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சென்னை, 

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து விலை ஏற்றம் காணப்படுகிறது.

இந்த நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்றும், இந்த கட்டண உயர்வு 24-ந் தேதி (அதாவது நேற்று) அதிகாலை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினசரி டீசல் விலை உயர்வால் எங்களுடைய தொழில் நலிவடைந்து வருகிறது.

எனவே வேறு வழியின்றி சரக்கு லாரிகளின் வாடகை கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறோம். இடம், எடை, பொருட்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கட்டண உயர்வு இருக்கும்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.8 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்ட சரக்கு வாடகை கட்டணம் ரூ.10 ஆயிரமா கவும், சேலத்தில் இருந்து திருச்சி, கோவைக்கு ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களுக்கு செல்லும் லாரி வாடகை கட்டணம் ரூ.25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கான கட்டணத்தை ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பார்சல் புக்கிங் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (வால்டாக்ஸ் சாலை) செயலாளர் ஜெ.ரமேஷ்குமார் கூறியதாவது:-

சென்னை வால்டாக்ஸ் சாலையில் 400-க்கும் மேற்பட்ட லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு, வெளிமாநிலங்களுக்கும் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்று வருகிறது.

தற்போது டீசல் கட்டண உயர்வால் வேறு வழியின்றி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளோம். இதுவரையில் ஒரு டன் மளிகை பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,200 கட்டணமாகவும், இரும்பு பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,250 கட்டணமாகவும் வசூலித்து வந்தோம்.

இன்று முதல் (நேற்று) 25 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை பழைய நிலைமைக்கு கொண்டு வரும்பட்சத்தில், உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை குறைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. மாநகர பஸ்களிலும் பயணிகள் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் அதிரடியாக விலை ஏற்றப்பட்டது. இந்த நிலையில் சரக்கு லாரி வாடகை கட்டணமும் அதிகரித்து இருக்கிறது.

சரக்கு லாரிகள் கட்டண உயர்வால், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story