லாரி வாடகை உயர்வால் காய்கறி விலை 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு வியாபாரிகள் தகவல்


லாரி வாடகை உயர்வால் காய்கறி விலை 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு வியாபாரிகள் தகவல்
x
தினத்தந்தி 25 Sep 2018 9:45 PM GMT (Updated: 25 Sep 2018 9:45 PM GMT)

லாரி வாடகை உயர்வால் காய்கறி விலை 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் லாரி வாடகை உயர்வு எதிரொலியால் காய்கறி விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் சுகுமார் கூறியதாவது:-

கர்நாடகாவில் காய்கறி சீசன் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் குறைந்துவிடும். அதைத்தொடர்ந்து வழக்கம்போல விலை அதிகரிக்கும். இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது லாரி வாடகையை உயர்த்தி இருக்கிறார்கள். இன்னும் எங்களுக்கு புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விலையில் ‘பில்’ வரவில்லை.

அனேகமாக நாளை(இன்று) முதல் புதிய வாடகைப்படி பில் வரும் என்று நினைக்கிறோம். அப்படி வந்தால், காய்கறி விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம்(ஒரு கிலோ) வருமாறு:-

தக்காளி - ரூ.10 முதல் ரூ.13 வரை, கத்தரிக்காய் - ரூ.10 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் - ரூ.20 முதல் ரூ.30 வரை, அவரைக்காய் - ரூ.30 முதல் ரூ.35 வரை, நூக்கல் - ரூ.10, கேரட் - ரூ.20 முதல் ரூ.30 வரை, பீட்ரூட் - ரூ.10, புடலங்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, பாகற்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, வெண்டைக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.20 முதல் ரூ.30 வரை, பல்லாரி - ரூ.12 முதல் ரூ.18 வரை, கோவைக்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, கொத்தவரங்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, முருங்கைக்காய் - ரூ.25 முதல் ரூ.35 வரை, சேனைக்கிழங்கு - ரூ.20, சேப்பக்கிழங்கு - ரூ.20, வாழைக்காய்(காய் ஒன்று) - ரூ.5 முதல் ரூ.10 வரை, தேங்காய்(காய் ஒன்று) - ரூ.20 முதல் ரூ.28 வரை, மிளகாய் - ரூ.20, இஞ்சி - ரூ.40 முதல் ரூ.50 வரை, உருளைக்கிழங்கு - ரூ.25, காலிபிளவர் - ரூ.20, பச்சை பட்டாணி - ரூ.130.

Next Story