போலீஸ் காவலில் எடுக்க மனு கருணாஸ் எம்.எல்.ஏ. இன்று கோர்ட்டில் ஆஜர்


போலீஸ் காவலில் எடுக்க மனு கருணாஸ் எம்.எல்.ஏ. இன்று கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 25 Sep 2018 11:19 PM GMT (Updated: 25 Sep 2018 11:19 PM GMT)

போலீஸ் காவலில் எடுப்பதற்காக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., கடந்த 16-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன் தனது காக்கிச்சட்டையை கழற்றி விட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணாஸ் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் கருணாஸ் எம்.எல்.ஏ., ஜாமீன் கோரி எழும்பூர் 14-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேவேளையில், கருணாசை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி எழும்பூர் 14-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருணாசிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நடிகர் கருணாசை போலீஸ் காவலில் எடுக்கும் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். கருணாஸ் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேல், எழும்பூர் 14-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக வேலூர் சிறையில் இருந்து அவரை போலீசார் அழைத்து வருகிறார்கள்.

நடிகர் கருணாசை போலீஸ் காவலில் எடுப்பது ஏன்? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நடிகர் கருணாஸ் தனது பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுள்ளார். சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன்பற்றி கருணாஸ் கடுமையாக பேசியுள்ளார். துணை கமிஷனரிடம் அவருக்கு என்ன பிரச்சினை? துணை கமிஷனரைப்பற்றி கடுமையாக பேசுவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து கருணாசிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

மேலும் கருணாஸ் தனது பேச்சில் தினமும் மதுவுக்காக ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார். அந்தப்பணம் அவருக்கு எங்கிருந்து வருகிறது? என்பது பற்றி விசாரணை நடத்த உள்ளோம். முதல்-அமைச்சர் பற்றியும் அவர் கூறிய கருத்துகள் பற்றி விசாரிக்கப்பட உள்ளது. சர்ச்சைக்குரிய பேச்சை கருணாஸ் பேசியதற்கு பின்னணியில் யாராவது தூண்டுதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதுபற்றியும் அவரிடம் கேள்வி கேட்க உள்ளோம். அதனால் தான் 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கருணாஸ் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் இன்று கோர்ட்டில் விசாரணை நடக்க உள்ளது.

Next Story