சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளில் எம்எல்ஏ கருணாஸ் கைது


சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளில் எம்எல்ஏ கருணாஸ் கைது
x
தினத்தந்தி 26 Sep 2018 2:42 PM GMT (Updated: 26 Sep 2018 2:42 PM GMT)

சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு வழக்குகளில் எம்.எல்.ஏ. கருணாஸை போலீஸ் கைது செய்தது.


சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவருடைய பேச்சு வன்முறையை தூண்டு வகையிலும் இருந்தது. 

கருணாசின் சர்ச்சை பேச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 23-ந்தேதி கருணாசை கைது செய்தனர்.

 வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கருணாஸை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு வழக்குகளில் எம்.எல்.ஏ. கருணாஸை போலீஸ் கைது செய்துள்ளது. 

சென்னையில் கடந்த ஏப்ரலில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின்போது போலீஸ்காரர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். கிரிக்கெட் ரசிகர்களும் தாக்கப்பட்டனர். நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.வும், அவரது தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக நடிகர் கருணாஸ் மீதும், முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்போது அந்த வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 

Next Story