காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையா? மின்வாரிய தலைவர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையா? மின்வாரிய தலைவர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Sep 2018 9:15 PM GMT (Updated: 27 Sep 2018 8:26 PM GMT)

காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

வெளிமாநிலங்களில் இருந்து அதிக தொகைக்கு மின்சாரம் வாங்குவதற்காகவே, காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன் படுத்தவில்லை என கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா? என்பது குறித்து நேரில் ஆஜராகி பதில் அளிக்கும்படி, தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தலைவருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அவமதிப்பு வழக்கு

காற்றாலை மின்சாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் உள்ளதாக தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் (மின்வாரியம்) மீது குற்றம் சாட்டி தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மின்வாரியம் அமல்படுத்தவில்லை என கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மின் பற்றாக்குறை உள்ளதா?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது மின்பற்றாக்குறை உள்ளதா? அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா? அதை நிவர்த்தி செய்ய மின்வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மின்வெட்டு இருந்தால் காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்தக்கூடாது?

காற்றாலை மின்சாரத்தை முழுமையாக உபயோகிக்காததால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்களா? அவ்வாறு எத்தனை நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளது? காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின்வாரியம் பாக்கி வைத்துள்ள தொகை எவ்வளவு?

குற்றச்சாட்டு உண்மையா?

வெளிமாநிலங்களில் இருந்து அதிக தொகைக்கு மின்சாரம் வாங்குவதற்காகவே, தேவையான அளவு நிலக்கரியை இருப்பில் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா?

தொழில் நிறுவனங்கள் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எதிர்கால மின்சார தேவையை சமாளிக்க திட்டம் ஏதும் உள்ளதா? மின்வெட்டு ஏற்படாமல் தடுக்கவும், மின் தட்டுப்பாட்டை போக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

தடையில்லா மின்சாரம்

மின்மிகை மாநிலம் எனக் கூறப்பட்ட தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவே இந்த மின்வெட்டு ஏற்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த காலகட்டத்தில் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. மின்சாரமின்றி 10 நிமிடங்கள் கூட வாழ முடியாத சூழல் உருவாகி விட்டது. எனவே இதன் அத்தியாவசியத்தை கருத்தில்கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story