தடை நீக்க கோரும் மனுவை 2 வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தடை நீக்க கோரும் மனுவை 2 வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 28 Sep 2018 9:34 PM GMT (Updated: 28 Sep 2018 9:34 PM GMT)

ஐகோர்ட்டு விதிக்கும் தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை 2 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன்பு விசாரணைக்கு பட்டியலிடாத ஐகோர்ட்டு அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை பதிவாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய நிலத்துக்கு பட்டா வழங்க அரசு அதிகாரிகள் மறுப்பதாக ரவி ரெட்டி என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, ‘பல வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்யாமல், அரசு தரப்பில் வாய்தா வாங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பினால் 3 மாதங்களுக்குள் எதிர்தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த விதியை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.

தடை நீக்கம்

இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு சார்பில் ஆஜரான வக்கீல், ‘கடந்த 2002-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட விதி தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற விதி ஏற்கனவே 1965-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த விதி அமலில் தான் உள்ளது’ என்று விளக்கம் அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அமலில் உள்ள விதியின்படி, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பினால், 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதுபோன்று 3 மாதங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யாமல், காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்பவர்களிடம் உரிய விளக்கத்தை ஐகோர்ட்டு பதிவுத்துறை பதிவாளர்கள் எழுதி வாங்கவேண்டும்.

தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்தால், அந்த மனுவுக்கு எண் வழங்கப்பட்ட நாளில் இருந்து 2 வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை

இதை செய்ய தவறும், ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை தலைமை பதிவாளர் எடுக்க வேண்டும். இந்த உத்தரவு அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த உத்தரவு நகலை, ஐகோர்ட்டு பதிவுத்துறை உதவி பதிவாளர்கள், பதிவாளர்கள் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமை பதிவாளர் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

அதுகுறித்த அறிக்கையை அக்டோபர் 5-ந் தேதி தலைமை பதிவாளர் சி.குமரப்பன் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story