‘தொல்.திருமாவளவன் எங்களோடு நெருங்கி வருகிறார்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


‘தொல்.திருமாவளவன் எங்களோடு நெருங்கி வருகிறார்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 29 Sep 2018 11:15 PM GMT (Updated: 29 Sep 2018 10:26 PM GMT)

தொல்.திருமாவளவன் தங்களோடு நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி மதுரை பாண்டிகோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும், அரசின் முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்டங்களை வழங்கியும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சபாநாயகர் ப.தனபால் தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றிவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இந்த விழாவுக்கு தன்னை அழைத்தால் வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார். சென்னை வள்ளலார் நகர் பகுதியில் நடைபெற்ற முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார், தொல்.திருமாவளவனின் கருத்துக்கு பதில் அளித்து உள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவானது அரசு விழா என்பதால், கட்சி சார்பில் யாரையும் அழைக்க முடியாது. தொல்.திருமாவளவன் விழாவுக்கு அழைத்தால் வருவேன் என்று கூறினார். நிச்சயமாக அது நல்ல விஷயம். எங்களோடு நெருங்கி வருகிறார் என்பதைத்தான் அது காட்டுகிறது. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு விழா என்பதால் தொல்.திருமாவளவனாக இருந்தாலும் சரி மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்களை அழைப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. அரசு தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் டி.ஜெயக்குமாரின் கருத்துக்கு பதில் அளித்து தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். அனைவருக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில் விழாவுக்கு அழைப்பு விடுத்தால் நான் பங்கேற்பேன் என்று கூறியிருக்கிறேன். எம்.ஜி.ஆரை. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உரியவராக பார்க்க வேண்டியது இல்லை. அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்தினார்.

குறிப்பாக எளிய மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தினார். காலம் காலமாக நடத்தப்பட்டு வந்த ‘முனிசிப் கர்ணம்’ என்ற ஆட்சி நிர்வாகத்தை அடியோடு புரட்டி போட்டு ஒடுக்கப்பட்டவர்களும் பங்கேற்கும் வகையில் ‘கிராம நிர்வாக அதிகாரி’ என்ற புதிய உள்ளாட்சி நிர்வாக முறையை கொண்டு வந்தவர். அந்தவகையில், எம்.ஜி.ஆரை. விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுவானவராகவே பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story