சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பேனர்களை அகற்றக்கோரிய வழக்கு விசாரணை தொடங்கியது


சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பேனர்களை அகற்றக்கோரிய வழக்கு விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 30 Sep 2018 5:10 AM GMT (Updated: 30 Sep 2018 5:10 AM GMT)

சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்றக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

சென்னை,

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு, எம்ஜிஆர் பொன்மொழி தொகுப்பை வெளியிட்டு விழா பேருரை ஆற்றுகிறார். 

இந்தநிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் அவசர வழக்காக விசாரணை துவங்கி உள்ளது.

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன - அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

சட்ட விரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தரப்பு வாதம் நடைப்பெற்றது. ரிட் வழக்கில் இதுபோன்ற கோரிக்கையை எழுப்ப முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

Next Story