கோயம்பேடு பஸ் நிலையம் தொடங்க எம்.ஜி.ஆர். எடுத்த நடவடிக்கை என்ன? 1986-1987-ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பில் தகவல்


கோயம்பேடு பஸ் நிலையம் தொடங்க எம்.ஜி.ஆர். எடுத்த நடவடிக்கை என்ன? 1986-1987-ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2018 10:30 PM GMT (Updated: 3 Oct 2018 8:24 PM GMT)

கோயம்பேடு பஸ் நிலையம் உருவாக எம்.ஜி.ஆர். எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து 1986-1987-ம் ஆண்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை, 

கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, ‘நீங்கள் பெற்ற குழந்தைக்குப் பெயர் வைப்பதை விடுத்து, அடுத்தவர் குழந்தைக்கு ஏன் உங்கள் பெயர் வைக்கிறீர்கள்’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

1999-ம் ஆண்டு கோயம்பேடு பஸ் நிலையம் உருவாக கருணாநிதி அடிக்கல் நாட்டினார் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ‘கோயம்பேடு பஸ் நிலையம் உருவாக எம்.ஜி.ஆர். தான் நடவடிக்கை எடுத்தார்’ என்று தெரிவித்து இருந்தார். கோயம்பேடு பஸ் நிலையம் அமைய உண்மையிலேயே நடவடிக்கை எடுத்தது யார்? திட்டமிட்டது யார்? என்பது குறித்து விவாதமாகி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கோயம்பேடு பஸ் நிலையம் உருவாக எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார் என்பதற்கு 1986-1987-ம் ஆண்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கொள்கை விளக்க புத்தகத்தில் விடை கிடைத்துள்ளது. 1986-1987-ம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ந.நல்லுசாமி அன்றைய தினம் சட்டசபையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மானியக்கோரிக்கையில் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்தார்.

அந்த கொள்கை விளக்க குறிப்பில் 27-ம் பக்கத்தில் ‘புறநகர் பஸ் மற்றும் சுமைவண்டிகள் நிலையங்கள்’ என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நகர்ப்புற வளர்ச்சி பணியின் ஒரு பகுதி நடவடிக்கையாக சென்னை மாநகரத்தின் வெளிப்புறத்தில் பஸ் மற்றும் சுமை வண்டி நிலையங்கள் அமைக்கவும் நகரின் மத்திய பகுதியில் தற்போது உள்ள இடங்களை மாற்றி அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தின் மத்திய பகுதியை நோக்கி குவியும் முக்கிய சாலைகளில் பஸ் மற்றும் சுமை வண்டிகளின் போக்குவரத்தை தவிர்ப்பதன் மூலம் நகரத்தின் சாலை போக்குவரத்தை கணிசமாக குறைக்க உதவும்.

இதற்காக முக்கிய சாலைகளில் உள்வட்டச்சாலை சந்திக்கும் 3 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆலந்தூர், கோயம்பேடு, மாதவரம். இத்திட்டத்திற்கு 205 ஏக்கர் பரப்பளவில் அமையும். ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து தேவையான வசதிகளை அந்த இடங்களுக்கு செய்து தருவதால் அவைகள் நவீன பஸ் மற்றும் சுமை வண்டி நிலையங்களாக சிறப்பாக இயங்க முடியும். அந்த முடிவிடங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி மேம்படுத்தும் பணி முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இந்த திட்டங்களுக்கு தேவையான 205 ஏக்கர் நிலத்தில் 110 ஏக்கர் தனியார் நிலமாகும். 1986-1987-ம் ஆண்டு 65 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேட்டில் இந்த திட்டத்திற்கான வளர்ச்சி பணிகள் ஆரம்பமாகி விட்டது. இந்த திட்டங்கள் 7-வது திட்ட முடிவிற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1985-1986-ம் ஆண்டிற்கு ரூ.38 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் 1986-1987-ம் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசிடமிருந்து ரூ.50 லட்சம் 1986-1987-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்மூலம் கோயம்பேடு பஸ் நிலையம் உருவாக எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார் என்பது உறுதியாகி உள்ளது.

Next Story