கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு 1999-ல் அடிக்கல் நாட்டியவர் கருணாநிதி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்அறிக்கை


கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு 1999-ல் அடிக்கல் நாட்டியவர் கருணாநிதி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்அறிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2018 11:00 PM GMT (Updated: 3 Oct 2018 8:37 PM GMT)

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு 1999-ல் அடிக்கல் நாட்டியவர் கருணாநிதி என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, 

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு 1999-ல் அடிக்கல் நாட்டியவர் கருணாநிதி என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோயம்பேடு பஸ் நிலையம்

கோயம்பேடு பஸ் நிலையம் உருவாக நடவடிக்கை எடுத்தவர் எம்.ஜி.ஆர். என்று சைதை துரைசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் இந்தத் திட்டத்தினை எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னையில் எந்தப் பகுதியில் எல்லாம் மாற்றம் வேண்டுமென்று மனுவாகக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். சைதை துரைசாமி இதுபோல் செய்திகளை சொல்வது புதிது இல்லை.

எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி மறைந்தார். கோயம்பேடு பஸ் நிலைய பணிகள் தி.மு.க. ஆட்சியில் 6-6-1999 அன்று கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு உருபெற்றது. எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ 12 ஆண்டுகள் கழித்து இந்தப்பணி முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். புகழ்

சைதை துரைசாமி சொல்வதைப் போல் 1987-ம் ஆண்டே இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருந்தால் இந்த பஸ் நிலையம் அமைய நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவரங்கள், அதற்கான திட்ட மதிப்பீடுகள், நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அரசாணை, ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற எதையாவது ஆதாரமாக வெளியிட தயாராக இருக்கிறாரா?.

1987-ல் எம்.ஜி.ஆரால் உருவான திட்டமென்றால் 1991 முதல் 1996 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கான பணிகளை ஏன் அப்போது செய்யவில்லை. எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதாக நினைத்து, தி.மு.க.வை சீண்டுகின்ற வேலையைச் செய்தால் பொறுத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

துணை நின்றவர் கருணாநிதி

எம்.ஜி.ஆர். தயவால் மட்டுமே கருணாநிதி அரசியல் அதிகாரம் பெற்றது போல சைதை துரைசாமி பேசுகிறார். எம்.ஜி.ஆரின் சினிமா புகழ் தி.மு.க.வுக்கும், அவரது தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்கும் பயன்பட்டது என்றால், அந்த சினிமாவில் அவர் புகழ் பெறுவதற்குத் துணை நின்றவர் கருணாநிதி. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தின் வெற்றிக்கு காரணம் கருணாநிதி வசனமே. அதுபோல, மந்திரிகுமாரி படம் தான் எம்.ஜி.ஆரின் முதல் சூப்பர் ஹிட் படம்.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதற்கு படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன் ஒப்புக் கொள்ளவில்லை. படத்தின் தயாரிப்பாளரான மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் முன் நிற்பதற்குக்கூட நடிகர்கள் பயந்து கொண்டிருந்த காலம் அது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், கருணாநிதியும் தான் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரத்தின் சமமாக உட்கார்ந்து பேசக்கூடிய படைப்பாளர்கள்.

ஜெயலலிதா நிராகரித்தார்

அந்த உரிமையில், கருணாநிதி, மந்திரிகுமாரி படத்தில் எம்.ஜி.ஆர். தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் என்பதே வரலாறு. கருணாநிதி பெற்றுத் தந்த அந்த வாய்ப்பிற்குப் பிறகு தான் எம்.ஜி.ஆர் முழுமையாக கதாநாயகனாக பல வெற்றிப் படங்களைத் தந்தார். நட்புக் காலத்தில் ஒருவருக்கொருவர் பல உதவிகளை செய்ததை அவர்கள் நன்றி மறக்காமல் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் பெயரைச்சொல்லி அரசியல் செய்தவர்களிடம் அந்த நன்றி விசுவாசம் இருந்ததா?.

திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்ட வேண்டும் என்று திரையுலகத்தினர் வைத்த கோரிக்கையை நிராகரித்த ஜெயலலிதா, தன்னுடைய பெயரையே சூட்டிக் கொண்டபோது சைதை துரைசாமி எங்கே போனார்?. அந்தத் திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டியவர் கருணாநிதி தான் என்பதையாவது நன்றியுடன் நினைத்துப் பார்ப்பாரா சைதை துரைசாமி?. மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியவர் கருணாநிதி தான் என்பதாவது நினைவிருக்கிறதா?.

கற்பனைகளை அவிழ்த்து விடுகிறார்

2016-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி 2017 ஜனவரியில் நிறைவடைந்திருக்க வேண்டிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, காலதாமதமாக 2017-ல் தொடங்கி 2018 செப்டம்பரில் நிறைவு செய்திருக்கிறார்களே இந்த அலட்சியம் குறித்து எம்.ஜி.ஆர் விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சைதை துரைசாமி கேள்வி எழுப்பியதுண்டா?. 2016 ஜனவரியில் முதல்-அமைச்சர் பதவியில் ஜெயலலிதாதானே இருந்தார்?. அவரிடம் ஏன் இது பற்றிக்கேட்கவில்லை.

ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தைக் கட்டியது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். அதனால்தான் அதற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைப்பதைத் தவிர்த்து, அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக நிறைவேற்றிய திட்டம் ஏதாவது இருந்தால் அதற்குப் பெயர் வையுங் கள் என மு.க.ஸ்டாலின் சொன்னதில் என்ன தவறு?.

நீங்கள் பெற்ற குழந்தைக்குப் பெயர் வைப்பதை விடுத்து, அடுத்தவர் குழந்தைக்கு ஏன் உங்கள் பெயர் வைக்கிறீர்கள் என மு.க.ஸ்டாலின் நியாயமான கேள்வி கேட்டார். சைதை துரைசாமியோ, அடுத்தவர் குழந்தைக்கு அல்ல, பிறக்காத குழந்தைக்கு தூளி கட்டி லாலி பாடுவது போல கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுகிறார். எனவே தி.மு.க.வின் செயல்பாடுகள் குறித்து பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story