‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்’ தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் பேட்டி


‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்’ தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2018 10:00 PM GMT (Updated: 3 Oct 2018 8:40 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, சென்னையில் தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் சிலர் பேட்டியளித்தனர்.

சென்னை, 

தூத்துக்குடி மாவட்டம் அ.குமாரரெட்டியூர், தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த மக்கள் கூட்டமைப்பினர் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

‘ஸ்டெர்லைட்’ ஆலை பாதிப்பு குறித்து தினமும் புதுப்புது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆலை மூடப்பட்டதற்கு மக்கள் போராட்டம் தான் காரணமே தவிர, சுகாதார சீர்கேடு இல்லை. பல வருடங்களாக நாங்கள் ஆலைக்கு அருகில் தான் குடியிருக்கிறோம். எங்களுக்கு இதுவரை எந்த பாதிப்போ, நோயோ இல்லை. எனவே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ‘ஸ்டெர்லைட்’ ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் கப்பல் நிறுவனங்களும், சரக்கு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. லாரி உள்பட கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் என ஒட்டுமொத்தமாக 80 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்” என்றார்.

முன்னதாக தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

பேட்டியின்போது, தூத்துக்குடியில் எடுக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை ஒன்றை டாக்டர் ராஜேஸ்வர் என்பவர் வாசித்தபோது, ‘தூத்துக்குடியில் இருக்கும் புற்றுநோய் தாக்கத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது’ என அவர் குறிப்பிட்டார். இதையடுத்து புள்ளிவிவரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார்.

அப்போது அங்கிருந்த அ.குமாரரெட்டியூர், தெற்கு வீரபாண்டியபுரம் மக்கள் நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘ஏன் இப்படி கேள்வியா கேட்டு சங்கடபடுத்துறீங்க? ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கு நீங்களே தடையா இருப்பீங்க போலிருக்கே’ என்று நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story