தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை ; உயர் அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை


தமிழகத்திற்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை ; உயர் அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 4 Oct 2018 7:11 AM GMT (Updated: 4 Oct 2018 7:11 AM GMT)

தமிழகத்தில் வரும் 7-ந்தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை உயர் அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை

தமிழகத்தில்  வரும் 7 -ந்தேதி( ஞாயிற்றுக்கிழமை)  பலத்த  கனமழை பெய்யும் என வானிலை மையம்   ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகம், மற்றும் அரபிக்கடல் பகுதியிலும் பருவ மழை முடிவுக்கு வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் இன்று காலை முதல் 7-ந்தேதி காலை 4 மணி வரை 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 8-ந்தேதி மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்.7ம் தேதி பலத்த  கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக பேரிடர் மேலாண்மை இயக்குனர் சத்திய கோபால் தகவல் தெரிவித்து உள்ளார். முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 தமிழகத்தில் வரும் 7ம் தேதி ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி மக்களுக்கு தேவையான நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெற செய்ய வேண்டும், மின் இணைப்புகளை முன்கூட்டியே துண்டிக்க வேண்டும் என்பது போன்றவை அதில் உள்ளன. இது குறித்தெல்லாம் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனைகளை மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Next Story