மழை, வெள்ள எச்சரிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் எடப்பாடி பழனிசாமி பேட்டி


மழை, வெள்ள எச்சரிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2018 12:00 AM GMT (Updated: 4 Oct 2018 6:46 PM GMT)

மழை, வெள்ள எச்சரிக்கையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா?.

பதில்:-எய்ம்ஸ் மருத்துவ மனையைப் பொறுத்தவரைக் கும் ஜெயலலிதா இருக்கின்ற பொழுதே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் மதுரையிலே எய்ம்ஸ் மருத் துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். விரைவிலே பிரதமரை சந்திப்பேன். நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை வரும், எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

கேள்வி:-தமிழகத்தில் 7-ந் தேதியிலிருந்து பருவ மழை பொழியும் என்று இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதாவது எடுத்து இருக்கிறதா?

பதில்:-பருவ மழை முன்னெச்சரிக்கையைப் பொறுத்தவரைக்கும், கிட்டத்தட்ட 3 முறை அரசினுடைய உயர் அதிகாரிகளை அழைத்து தலைமைச்செயலகத்திலே அவர்களுடைய ஆலோசனைகளை பெற்று அதற்குத்தக்க ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. மழை, வெள்ள எச்சரிக்கையை, எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதில் அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்குத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

கேள்வி:-நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுமா?

பதில்:- தேர்தலே அறிவிக் காத நிலையில் கூட்டணி பற்றி எப்படி பேசமுடியும். இப்பொழுது இருக்கின்ற பிரச்சினை, நாங்கள் தனியாக இருக் கின்றோம், யாருடனும் கூட்டணி கிடையாது, அந்த அடிப்படையில் நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.

கேள்வி:-சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்று காமெடி நடிகரும், எம்.எல்.ஏ. வுமான கருணாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:-ஆளும்கட்சியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலே என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். சட்டம் என்ன சொல்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.

கேள்வி:-ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்ற நிலையில் இந்த இடைத்தேர்தலில்....?

பதில்:-ஆர்.கே.நகர் தேர்தலில் எப்படி மக்களை ஏமாற்றி அவர் வெற்றி பெற்றார் என்று எல்லோருக்கும் தெரியும். திருப்பரங்குன்றம் மக்கள் நல்ல விவேகமான மக்கள், நன்றாக சிந்தித்து செயலாற்றக் கூடியவர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்க்கதரிசனமாக முடிவு செய்யக்கூடியவர் கள். இந்த தொகுதி வாக்காளர்கள் அ.தி.மு.க. மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். மதுரை மாவட்டம் ஒரு ராசியான மாவட்டம். இங்கே எது ஆரம்பித்தாலும் அது வெற்றியோடு முடியும். அந்த அடிப்படையில் முதன்முதலாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் கட்சி பணியை நாங் கள் தொடங்கியிருக்கிறோம்.

கேள்வி:-உள்ளாட்சி தேர்தல் எப்போது தான் நடக்கும்?

பதில்:-ஏற்கனவே பலமுறை ஊடகங்களில் சொல்லிவிட்டோம். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வழக்கு முடிந்தவுடன் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும். கூட்டுறவு சங்கத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். 93 சதவீதம் வெற்றியை ஈட்டி, வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கின்றோம். எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story