“கருணாஸ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய முயற்சி செய்யவில்லை” மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்


“கருணாஸ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய முயற்சி செய்யவில்லை” மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 10:00 PM GMT (Updated: 4 Oct 2018 7:17 PM GMT)

கருணாஸ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய முயற்சிக்கவில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

மதுரை, 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த 2017-ம் ஆண்டு பூலித்தேவன் பிறந்தநாள் விழாவின்போது பல்வேறு தரப்பினர் மாலை அணிவிக்க வந்தனர். அந்த நேரத்தில் தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில தலைவர் முத்தையா தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது எனது வாகனம் தடையாக இருப்பதாக கூறப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து வந்துவிட்டோம்.

அன்று மதியம் நானும் எனது ஆதரவாளர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 30 பேர் சேர்ந்து முத்தையாவின் வாகனத்தை சேதப்படுத்தியதாக தமிழ்நாடு தேவர் பேரவையை சேர்ந்த சுப்பையாபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்ய முயற்சி செய்கின்றனர். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராக காலஅவகாசம் வேண்டும் என்று போலீசார் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து குறுக்கிட்ட கருணாஸ் தரப்பு வக்கீல், மனுதாரரை கைது செய்யும் நோக்கத்தில் சென்னையில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீசார் முகாமிட்டுள்ளனர். முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரையில் மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

ஆனால் இப்போதைக்கு மனுதாரரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபடவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு (8-ந் தேதி) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story