ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 4 லட்சம் மனுக்கள் தேசிய பசுமை தீர்ப்பாய குழுவிடம் வழங்கப்பட்டது


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 4 லட்சம் மனுக்கள் தேசிய பசுமை தீர்ப்பாய குழுவிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 5 Oct 2018 10:00 PM GMT (Updated: 5 Oct 2018 7:40 PM GMT)

ஸடெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயக் குழுவிடம் 4 லட்சம் மனுக்கள் வழங்கப்பட்டது.

சென்னை, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா? வேண்டாமா? என முடிவு செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக என்ஜினீயரும், விஞ்ஞானியுமான வரலட்சுமி ஆகியோரை கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இந்த குழுவின் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள், வணிகர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 4 லட்சம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது, நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதேபோன்று ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக அந்த ஆலையை வாழ்வாதாரத்துக்காக நம்பியுள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், கிராம மக்கள் சார்பில் 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் ஆகியோர் தீர்ப்பாய குழுவிடம் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ மூலம் மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.அர்ஜுனன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் அமைப்பின் நிர்வாகி வக்கீல் மில்டன் உள்பட பலர் மனுக்களை அளித்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று அளிக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்கள் ஒரே அறையில் தயாரிக்கப்பட்டவை என்றும், ஆலை நிர்வாகமே இவைகளை தயார் செய்து அளித்துள்ளதாகவும் ஆலைக்கு எதிராக மனு அளித்தவர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன், ஆலையை திறக்க வேண்டும் என்று மனு அளித்தவர்கள் தங்களது ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story