திடீர், திடீரென்று மின்சாரம் துண்டிப்பு: சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்கள் குற்றச்சாட்டு


திடீர், திடீரென்று மின்சாரம் துண்டிப்பு: சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Oct 2018 7:52 PM GMT (Updated: 5 Oct 2018 7:52 PM GMT)

சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக திடீர், திடீரென்று அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அறிவிக்கப்படாத மின்தடை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

திடீர் மின் தடை ஏற்படுவது குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

சென்னை நகரில் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படும் இடங்கள் நாளிதழ்கள் மூலம் பொதுமக்களுக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது.

தற்போது மழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்தவுடன் உடனடியாக மின்சார வினியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது. பழுது ஏற்படும் இடங்களில் மட்டும் பணிகள் முடிந்தவுடன் மின்வினியோகம் வழங்கப்படுகிறது.

மழை காலங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் செய்யப்படுவது நடைமுறைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story