“நவீன இந்திய வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறவில்லை” ஓ.பன்னீர்செல்வம் வேதனை


“நவீன இந்திய வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறவில்லை” ஓ.பன்னீர்செல்வம் வேதனை
x
தினத்தந்தி 5 Oct 2018 10:15 PM GMT (Updated: 5 Oct 2018 8:05 PM GMT)

நவீன இந்திய வரலாற்றில் தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு உரிய அளவில் இடம்பெறவில்லை என்று தமிழ்நாடு வரலாற்று பேரவையின் வெள்ளிவிழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை, 

சென்னை பல்கலைக்கழகம் இந்திய வரலாற்று துறை சார்பில் தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநாட்டு தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான என்.ராஜேந்திரன், தமிழ்நாடு வரலாற்று பேரவையின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். சுந்தரம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வெள்ளிவிழா ஆண்டுமலரையும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு ஆண்டையொட்டி கருத்தரங்கு ஆய்வு கட்டுரையையும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து வரலாற்றியலுக்கு ஆற்றிய பெரும்பணிக்காக தினமலர் நாளிதழ் ஆசிரியரும், நாணவியலாளருமான ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு சிறந்த வரலாற்று அறிஞர் என்ற வெகுமதி பட்டயம் வழங்கப்பட்டது.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மறைத்துவிட்டோ அல்லது ஒதுக்கிவிட்டோ எழுதப்படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்கமுடியாது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

தமிழ்-திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக்குடும்பம், சைவ, வைணவ மரபுகள், கோவில்- சிலை வழிபாடுகள், திராவிட கலைகளான தென்னிந்திய கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வைதீகம் உள்ளிட்ட பல்வேறு மரபுகளில் மிகுந்த தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளன.

எனவே அவற்றை தவிர்த்துவிட்டு இந்திய பண்பாடு, நம்பிக்கை மரபுகளை யாரும் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பண்பாடு, கலைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தவர்களும் நமது தமிழர்களே ஆவர்.

தென்னிந்திய வரலாற்று பேரவை, தமிழ்நாடு வரலாற்று பேரவை போன்ற தமிழ் வரலாற்று ஆய்வு அமைப்புகள், தமிழக பண்பாடு குறித்த மறைக்கப்பட்ட தகவல்களை அறிவியல் முறையில் உறுதிசெய்து, தமிழகத்துக்கும், தென்னகத்துக்கும் இந்திய தேசிய வரலாற்றில் உரிய இடம் கிடைக்க முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. அந்த பணி வெற்றியுடன் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.

நவீன இந்திய வரலாற்றிலும் தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு அதற்குரிய அளவில் இடம்பெறவில்லை. இது வேதனைக்குரிய ஒன்றாகும். திராவிடர் தலைவர்களின் தொண்டுகளையும், அம்பேத்கரின் பங்களிப்பினையும் எவ்வகையிலும் குறைத்திடாது இந்திய தேசிய வரலாற்றில் இணைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story