மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் அறுவடை பாதிப்பு


மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் அறுவடை பாதிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2018 9:00 PM GMT (Updated: 6 Oct 2018 8:35 PM GMT)

மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் குண்டாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குண்டாறு அணையும், நம்பியாறு அணையும் நிரம்பி மறுகால் பாய்கிறது. செங்கோட்டை புளியரை பகுதியில் பெய்த மழையால் அந்த பகுதியில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கீழ வாசல் தெருவை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் கனமழையில் இடிந்து விழுந்தது. கடந்த 1-ந் தேதி முதல் பெய்து வரும் மழை காரணமாக மொத்தம் 11 வீடுகள் பகுதியாகவும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்து உள்ளன.

தூத்துக்குடி பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பாததால், அவர்களை கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் மூலமும், சிறிய ரக விமானம் மூலமும் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 700 பேர் இன்னும் கரை திரும்பவில்லை என்றும், வீடு வீடாக சென்று அவர்களை பற்றிய விவரம் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்து இருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் மழை நீடித்தது. இதனால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 35 பேர் நேற்று காலை மதுரை வந்தனர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், கோம்பை, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தேனி பங்களாமேடு, மூானாண்டிபட்டியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று 5 மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் இன்றி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் இரு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கோவை உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மேட்டுப்பளையம் வந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பன்சிட்டி-வேல்வியூ இடையேயும், தலையாட்டுமந்து என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மழையினால் குன்னூர் பகுதியில் 10 வீடுகள் சேதம் அடைந்தன. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குன்னூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, காங்கேயம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Next Story