பறக்கும் சாலைக்கு குறித்த காலத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவு


பறக்கும் சாலைக்கு குறித்த காலத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 6 Oct 2018 11:19 PM GMT (Updated: 6 Oct 2018 11:19 PM GMT)

சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கான நிலத்தை குறித்த காலத்தில் கையகப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை,

சென்னை துறைமுகம்-மதுரவாயல் 4 வழி பறக்கும் சாலை திட்டம் தொடர்பாக சென்னை துறைமுக வளாகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கப்பல் துறை அமைச்சகம், சென்னை துறைமுக பொறுப்புக்கழகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடற்படை, திட்ட ஆலோசகர்கள் மற்றும் மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்ட வரைபடம், சாலையின் அமைப்பு மற்றும் துறைமுகத்தின் அமைப்பு ஆகியவை பற்றி விளக்கினர். இந்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பீடு ரூ.2,700 கோடி. நெடுஞ்சாலைத்துறை மாற்றியமைக்கப்பட்ட வரைவு திட்ட அறிக்கையை வருகிற 10-ந்தேதி இறுதி முடிவுக்காக சமர்ப்பிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

சாலையின் அகலம் 20 மீட்டரில் இருந்து 29 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புனரமைப்பின் மொத்த செலவில் சென்னை துறைமுகமும், தமிழக அரசும் தலா 50 சதவீதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த செலவு அதிகரித்தால் அதனையும் மாநில அரசே ஏற்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சென்னை துறைமுகமும், கடற்படையும் புதிய திட்ட அமைப்பை ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

கடற்படை அதிகாரிகளுக்கான குடியிருப்பு வழியாக பறக்கும் சாலை செல்ல வேண்டியிருக்கிறது. எனவே அதற்கு ஈடான நிலத்தை சென்னை துறைமுகம் கடற்படைக்கு கொடுக்க வேண்டும். இதற்கான ஒப்புதலை கப்பல் துறை அமைச்சகமும் அளித்துள்ளது.

பறக்கும் சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புனரமைப்புக்கான செயல்பாடுகளை திட்டமிட்டபடி குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். திட்டத்தை விரைவாக முடிக்க பணிகளின் வளர்ச்சி அவ்வப்போது கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த தகவல் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story