துணை வேந்தர்கள் நியமனம் குறித்து விசாரணை தேவை திருநாவுக்கரசர் வலியுறுத்தல்


துணை வேந்தர்கள் நியமனம் குறித்து விசாரணை தேவை திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Oct 2018 10:00 PM GMT (Updated: 7 Oct 2018 8:36 PM GMT)

தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளதாக கவர்னரே கூறி இருப்பதால் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தவேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

ஆலந்தூர்,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் மழையை காரணம் காட்டி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் நடக்க முடியாத அளவுக்கு மழை ஒன்றும் இல்லை. 5 மாநிலங்களில் தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

18 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ. நிதியை செலவு செய்ய முடியாத நிலை உள்ளது. 40 லட்சம் மக்கள் எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கு தேர்தலை பற்றிய பயம் இருக்கிறது. தேர்தல் நடந்தால் தோற்று போய்விடுவோம் என்பதால் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மூலமாக இடைத்தேர்தலை தள்ளி வைத்து இருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் மீதான விலையை ரூ.2.50 குறைத்தாலும் தினமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் விலையை குறைத்து இருக்கலாம். எனவே இதை முழுமையான விலை குறைப்பு என்று சொல்ல முடியாது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளதாகவும், ஆனால் தான் பணம் வாங்காமல் திறமையின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமித்து உள்ளதாகவும் கவர்னர் கூறி உள்ளார்.

துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கவர்னர்தான் ஒப்புதல் வழங்கவேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில்தான் பணம் வாங்கி இருக்கவேண்டும். கவர்னரே சொல்லி இருப்பதால் இதில் சரியான முறையில் விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மாலையில் திருச்சிக்கு செல்லும்போது, விமான நிலையத்தில் நிருபர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது மகனை அரசியலில் இறக்கட்டும். இதில் பிரச்சினை இல்லை. ஒவ்வொருவராக புதிதாக நிறைய பேர் அரசியலுக்கு வருகின்றனர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருக்கும்போதே விஜயகாந்த் கட்சியை தொடங்கி, பொது வாழ்க்கைக்கு தைரியமாக வந்தவர். உடல்நலம் சரி இல்லாததால் தனது மகனை அரசியலுக்கு கொண்டு வருவதில் தப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story