28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான கைதி முதியோர் இல்லத்தில் மனைவியுடன் உருக்கமான சந்திப்பு


28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான கைதி முதியோர் இல்லத்தில் மனைவியுடன் உருக்கமான சந்திப்பு
x
தினத்தந்தி 7 Oct 2018 10:00 PM GMT (Updated: 7 Oct 2018 8:41 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 28 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை கைதி, முதியோர் இல்லத்தில் இருந்த தனது மனைவியை சந்தித்தது உருக்கமாக அமைந்தது.

வேலூர்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து நேற்று முன்தினம் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் என்ற சுப்பிரமணியம் (வயது 65) என்பவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார்.

அவரது விடுதலையும் அவர் காதல் மனைவியுடன் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வும் வருமாறு:-

இலங்கையை சேர்ந்தவர் பக்கா என்றழைக்கப்படும் விஜயா (60). இவர் இலங்கையில் இருந்து அகதியாய் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தவர். தெருக்களில் நடனம் ஆடி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். விஜயாவை சுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து நடனமாடி அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் இரவு இருவரும் சாலை ஓரம் உறங்கிக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு பிரச்சினையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் 1990-ம் ஆண்டு கைது செய்தனர். இருவருக்கும் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த விஜயாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனநோயாளியாக மாறினார். அவரது பேச்சும் பறிபோனது. பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் அருகே அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சுப்பிரமணியம் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவர் தனக்காக காத்திருக்கும் மனைவியை காண முதியோர் இல்லம் சென்றார். அங்கு தனது கணவருக்காக 28 ஆண்டுகள் காத்திருந்த விஜயா சுப்பிரமணியத்தை பார்த்ததும் ஓடிச்சென்று கையை பிடித்து அழுது கண்ணீர் வடித்தார்.

பின்னர் சுப்பிரமணியத்தை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்தார். விஜயாவை பார்த்த சுப்பிரமணியம் 20 முறையேனும் நலம் விசாரித்து சாப்பிட்டாயா.. சாப்பிட்டாயா.. என கேட்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

இதுகுறித்து சுப்பிரமணியம் கூறுகையில், ‘சொந்த ஊருக்கு சென்று, கிடைக்கும் வேலையை வைத்து வாழ்ந்து கொள்வோம்’ என்று தெரிவித்தார்.

Next Story