சென்னை சிட்லாபாக்கம்: அதிகாரிகளை தட்டிக்கேட்ட தன்னார்வலர்களை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்


சென்னை சிட்லாபாக்கம்: அதிகாரிகளை தட்டிக்கேட்ட தன்னார்வலர்களை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 22 Oct 2018 4:48 PM GMT (Updated: 22 Oct 2018 4:48 PM GMT)

சிட்லபாக்கத்தில் டெண்டரே விடாமல் முறைகேடாக பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை தட்டிக்கேட்ட தன்னார்வலர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்திருக்கிறார்கள்.

சென்னை,

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் ரூ.12 கோடியும், உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கி மூடுகால்வாய்(கட் அண்ட் கவர்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் ரூ.44½ லட்சத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

சேதுநாராயணன் தெரு, பாரதி தெரு, சொக்கநாதன் தெரு, மறைமலைஅடிகள் தெரு, பாம்பன் சுவாமிகள் தெரு, வைத்தியலிங்கம் தெரு, ஆபிரகாம் நகர், திருமகள் நகர், ஜி.டி.நாயுடுதெரு ஆகிய இடங்களில் மூடுகால்வாய் அமைக்கும் பணிகள் முடிவடையும் வரை மழைநீர் வெளியேற 1,650 மீட்டருக்கு தற்காலிக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அந்த பகுதிகளில் தற்காலிக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை பேரூராட்சி இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர், ‘‘உரிய பணி ஆணை இல்லாமல் பணிகள் செய்கிறீர்கள். பணி ஆணையை காட்டுங்கள்’’ என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அதிகாரிகள், ‘‘பணி ஆணை உள்ளது. அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்றனர். அப்போது அவர்கள், அங்கிருந்த அதிகாரிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களின் செல்போன்களை பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தன் செல்போனை அதிகாரிகள் பறித்துக்கொண்டதாக சிவகுமார் என்பவரும், வெள்ள தடுப்பு பணிக்காக தற்காலிக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பாலசந்தர், சிவகுமார், குமார் என்ற குமார் சுப்பிரமணியம் ஆகியோர் மீது சிட்லபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசனும் என இருவரும் தனித்தனியாக சிட்லபாக்கம் போலீசில் புகார் செய்தனர்.

இருதரப்பினர் அளித்த புகார்கள் மீது விசாரணை நடத்திய போலீஸ் உயர் அதிகாரிகள், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து சிட்லபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிட்லபாக்கம் ஜோதிநகரைச் சேர்ந்த பாலசந்தர் (29), அடிகளார் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி குமார் என்ற குமார் சுப்பிரமணியம் (61) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில்,  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

சிட்லபாக்கத்தில் டெண்டரே விடாமல் முறைகேடாக பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை தட்டிக்கேட்ட தன்னார்வலர்கள் மீது பொய் வழக்குபோட்டு கைது செய்து இருக்கிறார்கள். உள்ளாட்சித்துறையில் சந்தி சிரிக்கும் ஊழல்களை தட்டிக்கேட்டால் என்ன தவறு?. உடனடியாக அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story