தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தனை ‘டன்’ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தனை ‘டன்’ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 22 Oct 2018 10:15 PM GMT (Updated: 22 Oct 2018 7:57 PM GMT)

தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தனை டன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் அமர்நாத் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அமர்நாத்தின் மனைவி சவுஜனா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அரசு வழங்கும் இலவச அரிசி ஏழைகளுக்குத்தான் சென்றடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், ‘கடந்த 10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?, எத்தனை டன் அரிசி கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் கிருத்திகா கமல் ஆஜராகி, நீதிபதிகள் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மனுதாரரின் கணவர் அமர்நாத்திடம் இருந்து 13.5 குவிண்டால் இலவச ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசி, வெளிமாநிலங்களுக்கு சரக்கு ரெயில்கள் மூலம் கடத்தப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் நடைபெறாது. பெரிய அளவில் அரிசி கடத்தும் நபர்களை விட்டுவிட்டு, சில மூடைகளை கடத்தும் நபர்களை மீது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும் புகார்கள் வருகின்றன’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சுழற்சி முறையில், ஒவ்வொருவராக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இதற்காக 150 முதல் 200 பேர் அரிசி கடத்தலுக்காகவே சிறைக்கு அவ்வப்போது சுழற்சி அடிப்படையில் சென்று வருவார்கள். இத்தனை பேரை கைது செய்துள்ளோம் என்ற புள்ளிவிவரங்களுக்காக, இதுபோன்ற நபர் களை போலீசார் கைது செய்கின்றனர்’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘தமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் இலவச அரிசி, 2 முறை கொதிக்க வைக்கப்பட்ட அரிசி என்பதால், எளிதில் கெட்டுப் போகாது. நீண்ட காலத்துக்கு அதை சேமித்து வைக்க முடியும் என்பதால், பிற மாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது’ என்று கூறினர்.

பின்னர், ‘எத்தனை குடும்ப அட்டைதாரர் மாதந்தோறும் இலவச அரிசியை பெறுகின்றனர்?, மாதத்துக்கு எவ்வளவு அரிசி அவர்களுக்கு வழங்கப்படுகின்றது?, இலவச அரிசி ஆண்டுக்கு எத்தனை டன் வழங்கப்படுகிறது?, இலவச அரிசி தங்களுக்கு கிடைக்கவில்லை என்று எத்தனை பேர் இதுவரை அரசுக்கு புகார் செய்துள்ளனர்? இலவச அரிசியை வேறுபக்கம் திருப்பிவிட்டதாக குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள பதிவு செய்யப்பட்டுள்ளன?, இலவசமாக வழங்கப்படும் அரிசியின், சந்தை விலை மதிப்பு எவ்வளவு?, ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி எந்த அளவுகோளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன?’ என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டு, அதற்கு விரிவான பதிலை தமிழக அரசு வருகிற நவம்பர் 1-ந் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Next Story