பதிவு செய்த ஆவணத்தின் நிலை என்ன? வீட்டில் இருந்தே இணையதளத்தில் பார்க்கும் வசதி


பதிவு செய்த ஆவணத்தின் நிலை என்ன? வீட்டில் இருந்தே இணையதளத்தில் பார்க்கும் வசதி
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 8:04 PM GMT)

பதிவு செய்த ஆவணத்தின் நிலை என்ன என்பதை வீட்டில் இருந்தே இணையதளத்தில் பார்க்கும் வசதியை பத்திர பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

பத்திர பதிவுத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் மென்பொருளில் பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

* குறித்த நேரத்தில் வரிசை முறையில், பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏற்ப ‘ஸ்டார் 2.0’ மென்பொருளில் இணையவழி நாள் மற்றும் நேரம், முன்பதிவு செய்த நேர அடிப்படையில் வரிசை( First In First Out ) முறையில் ஆவணம் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

* ஆவணப்பதிவின் போதே ஆவணம் திரும்ப வழங்கப்படும் தேதி அல்லது ஆவணங்கள் நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தால் எந்த காரணத்திற்காக நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது என்ற விவரத்தை ரசீதில் அச்சிட்டு தரும் நடைமுறை.

* ஆவணப்பதிவு மறுக்கப்படும்போது எந்த காரணத்திற்காக பதிவு மறுக்கப்படுகிறது என்ற விவரம் அச்சிட்டு பதிவு மறுப்பு சீட்டு வழங்கும் நடைமுறை.

* ஆவணத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் வசதி. இந்த குறுஞ்செய்தி ஆவணப்பதிவின் 33 வெவ்வேறு நிலைகளில் அனுப்பப்படுகிறது.

* ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்து திரும்ப வழங்கும் நிலை வரை எந்த ஒரு நிலை குறித்தும் பொதுமக்கள் வீண் அலைச்சல் இன்றி தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழி எளிதாக அறிந்துகொள்ளும் புதிய வசதி கடந்த 22-ந் தேதி(நேற்று முன்தினம்) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் வழி பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தே பதிவுத்துறையின் https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் “ஆவணத்தின் நிலை” என்ற தெரிவை தேர்வு செய்து தங்களின் தற்காலிக ஆவண எண்ணையோ அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் முழுமையான எண்ணையோ அல்லது நிலுவை ஆவண எண்ணையோ அளித்தால் அந்த ஆவணத்தின் மீது எடுக்கப்பட்ட முழுநடவடிக்கைகளும் திரையில் தோன்றும்.

இதன்மூலம் ஆவணத்தின் தற்போதைய நிலையை எளிதாக அறிந்து கொள்ளலாம். மேலும் ஆவணம் திரும்ப வழங்க தயாராக இருப்பின் உடன் அலுவலகம் சென்று ஆவணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் வீண் அலைச்சல் வெகுவாக குறையும். இந்த வசதி கடந்த 19-ந் தேதி முதல் உருவாக்கப்பட்ட ஆவணங்களுக்கு பொருந்தும்.

மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story