வீட்டு வசதி வாரியம் வாடகை உயர்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


வீட்டு வசதி வாரியம் வாடகை உயர்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Oct 2018 9:03 PM GMT (Updated: 23 Oct 2018 9:03 PM GMT)

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிர்ணயம் செய்துள்ள வாடகை தொகை நியாயமானது என்றும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்தும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை சி.ஐ.டி. காலனி, ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி, மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கான வாடகை தொகையை தமிழக அரசு கடந்த ஆண்டு உயர்த்தியது. மேலும், பலரை வீட்டை காலி செய்யவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருக்கும் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வாடகை உயர்வு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பின்னர், அதாவது 15 ஆண்டுகளுக்கு பின்னர் வாடகை தொகையை உயர்த்தியது. சென்னை மாநகரில் உள்ள வீடுகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.5 என்றும், பிற மாவட்டங்களில் ஒரு சதுர அடிக்கு ரூ.3 என்றும் நிர்ணயம் செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச், இந்த கட்டணத்தை பாதியாக குறைத்துள்ளது.

இந்த நிலையில், 2017-ம் ஆண்டு வாடகை கட்டிடத்தை உயர்த்தியுள்ளது. உதாரணத்துக்கு ராயப்பேட்டை பகுதியில் 500 சதுர அடி கொண்ட வீட்டுக்கு குறைந்தபட்சம் மாதம் வாடகையாக ரூ.9,775-யை தனியார் வசூலிக்கின்றனர்.

குறைந்த தொகை

ஆனால், ராயப்பேட்டை, பீட்டர்ஸ் காலனியில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்போர் 500 சதுர அடி வீட்டுக்கு ரூ.1,438 மற்றும் ரூ.1,250 என்று வாடகை செலுத்துகின்றனர். இதனால், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 4-ந்தேதி வாடகையை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி, 575 சதுர அடி பரப்பளவில் உள்ள வீட்டுக்கு வெறும் ரூ.6 ஆயிரத்து 727-யை வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் மிகப்பெரிய வாடகை தொகை இல்லை. நியாயமான வாடகைதான். எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது.

வாடகை பாக்கி

வாடகையை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உறுதி செய்கிறேன். வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான பழுதடைந்த வீடுகளில் குடியிருப்போர் உடனடியாக வீட்டை காலி செய்யவேண்டும். வாடகை செலுத்தாமல், பல ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் குடியிருப்போரை உடனடியாக வெளியேற்றவும், அவர்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலிக்க சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் எல்லாம் 12 வாரத்துக்குள் எடுத்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story