எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்களை தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும் அப்பல்லோ நிர்வாகம் பதில் மனு தாக்கல்


எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்களை தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும் அப்பல்லோ நிர்வாகம் பதில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 23 Oct 2018 9:23 PM GMT (Updated: 23 Oct 2018 9:23 PM GMT)

எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்களை தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,


ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

1984-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எந்த அடிப்படையில் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார்? என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வதில் இருந்த சிக்கல் என்ன? என்பதை கண்டறியலாம் என்று கருதிய ஆணையம் எம்.ஜி.ஆரின் மருத்துவ ஆவணங்களை 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால், எம்.ஜி.ஆர். சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் நேற்று ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை. அதேவேளையில் இதுதொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘எம்.ஜி.ஆர். சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடமும் உள்ளது. எம்.ஜி.ஆரை பொறுத்தமட்டில் அவர் முக்கிய பிரமுகர் என்பதால் அவரது சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, இதுதொடர்பாக தமிழக அரசிடம் தான் ஆணையம் கேட்க வேண்டும். எம்.ஜி.ஆரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல உத்தரவிட்டது யார்? என்று ஆணையம் கேட்டுள்ளது. அவரை வெளிநாடு அழைத்து செல்லும் விவகாரத்தில் அப்பல்லோவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழக அரசு தான் அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டது. எனவே, இதுதொடர்பான கேள்விக்கு எங்களால் பதில் அளிக்க இயலாது. அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரம் எதுவும் எங்களுக்கு தெரியாது. இதுதொடர்பாகவும் தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும்’ என்று கூறி உள்ளது.

இந்த மனு மீது இன்று(புதன்கிழமை) நீதிபதி விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சுவாச நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் நரசிம்மன், மருத்துவர் தங்கராஜ் பால்ரமேஷ் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.

மருத்துவர் நரசிம்மன் அளித்த வாக்குமூலத்தில், ‘23.9.2016 அன்று சுவாசம் தொடர்பாக ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதித்த போது சுமார் 30 நிமிடம் என்னிடம் பேசினார். அப்போது அவர், எனது குடும்பம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர், ‘பிரைவேட் லைப் ஆப் சேர்மன் மாவோ’ என்ற புத்தகத்தை படித்து பாருங்கள் என்று அறிவுறுத்தினார். ஜெயலலிதாவுக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை முடிந்த பின்னர் புத்தகம் வாங்கினீர்களா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே ஜெயலலிதா, அவரது உதவியாளர் மூலம் புத்தகத்தை வாங்கி எனக்கும், மருத்துவர் சிவக்குமாருக்கும் அதனை பரிசாக அளித்தார்’ என்று கூறி உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எக்மோ சிகிச்சை அளித்தது தொடர்பாக மருத்துவர் தங்கராஜ் பால்ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.

Next Story