மாபியா கும்பல் ‘மார்பிங்’ செய்து ஆடியோவை வெளியிட்டது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு


மாபியா கும்பல் ‘மார்பிங்’ செய்து ஆடியோவை வெளியிட்டது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 9:36 PM GMT)

எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும், மாபியா கும்பல் ‘மார்பிங்’ செய்து ஆடியோவை வெளியிட்டு இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் தகுதிநீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்று ஒளித்து வைத்து இருக்கிறார். எல்லா நதிகளும் ஒன்று சேரும் இடம் கடல். அதுபோல, அ.தி.மு.க.வுக்கு அவர்கள் திரும்புவார்கள். ஒளித்து வைத்தாலும், கடத்தி வைத்தாலும் அவர்கள் கண்டிப்பாக அ.தி.மு.க.வுக்கு வருவார்கள்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் எத்தனை பேர் எங்கள் பக்கம் வருவார்கள் என்று இப்போது எப்படி சொல்ல முடியும். குறிப்பிட்டு சொல்லமுடியாது. எல்லோரும் வருவார்கள். அவர்கள் இப்போது அ.தி.மு.க. தான். எனவே மீண்டும் திரும்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய இணை மந்திரி அக்பர் பதவி விலகியது போல, உங்களுக்கு எதிராக ஆடியோ வெளியான விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக வேண்டும் என ஆ.ராசா கூறி இருக்கிறாரே?

பதில்:- எந்த ஒரு விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். இதற்கு பின்னணியாக செயல்படுபவர்களை சட்டரீதியாக சந்திப்பேன்.

கேள்வி:- தங்கதமிழ்ச்செல்வன், ஆடியோவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்:- அவர் அவருடைய கருத்தை சொல்கிறார். நான் என் கருத்தை சொல்கிறேன்.

மாபியா கும்பல்

கேள்வி:- முதல்-அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டும் என்று ஆ.ராசா கூறி இருக்கிறாரே?

பதில்:- ஐகோர்ட்டு இந்த வழக்கில் டெண்டர் முறை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கூறி இருக்கிறது. யார், யாரெல்லாம் குற்றம் செய்து இருக்கிறார்கள் என்று ஐகோர்ட்டு சுட்டிக்காட்டவில்லை. அப்படி சொல்லாதபோது எதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அது அவசியம் இல்லாதது.

கேள்வி:- மாபியா கும்பல் ஆடியோ வெளியிட்டதாக சொன்னீர்கள். அப்படி ஆடியோவை நாங்கள் வெளியிட வில்லை என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் கூறி இருக்கின்றனரே?

பதில்:- ‘மார்பிங்’ செய்து மாபியா கும்பல் தான் வெளிவிடும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story