‘இயற்கை வளங்களை பாதுகாக்க முன்வரவேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்


‘இயற்கை வளங்களை பாதுகாக்க முன்வரவேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Oct 2018 10:45 PM GMT (Updated: 24 Oct 2018 8:25 PM GMT)

இயற்கை வளங்களை பாதுகாக்க முன் வரவேண்டும் என்று காணொலி காட்சி மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

சென்னையில் தாம்பரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ‘காக்னிசென்ட்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காணொலிக்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் சென்னையில் உள்ள ‘காக்னிசென்ட்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும், பெங்களூருவில் உள்ள இன்போசிஸ், சிஸ்கோ, ஐதராபாத்தில் உள்ள டெக் மகேந்திரா, புனேயில் உள்ள பெர்சிஸ்டன்ட் சிஸ்டம், கொல்கத்தாவில் உள்ள டி.சி.எஸ்., புவனேஸ்வரில் உள்ள மைன்டிரி மற்றும் டெல்லியில் ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 இடங்களில் இருந்து பிரதமரிடம் கேள்விகளை கேட்டனர். முன்னதாக ‘நான் அல்ல நாம்’ என்ற பெயரிலான இணையப் பக்கம் மற்றும் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஆழ்குழாய் கிணறுக்கான குடிநீர் குழாயிலிருந்து விழும் தண்ணீரை எப்படி மறுபடியும் பயன்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். குறிப்பாக ஆழ்குழாய் அருகிலேயே வீணாகும் தண்ணீர் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் மழைநீர் சேகரிப்பு போன்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதேபோல் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதன் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.

இதனை அரசால் மட்டும் செய்துவிட முடியாது. எனவே, விவசாயிகள் மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும். கிராமங்களின் வயல்வெளிகளில் இரண்டு நிலப்பகுதிகளைப் பிரிக்கும் வரப்புகளில் மரங்களை நட்டு பயனடையலாம். நமது நாடு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான மரங்களை இறக்குமதி செய்கிறது. வரப்புகளில் மரங்களை வளர்ப்பதன் மூலம், 20 ஆண்டுகளில் இந்த இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிடமுடியும். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமரின் உரையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் அதிகமான பொதுச் சேவை மையங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பார்த்தனர். பிரதமரின் காணொலிக் காட்சி மூலமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவ்டேகர், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன், மனோஜ் சின்ஹா, எஸ்.எஸ். அலுவாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story