திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்; முதல்-அமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்


திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்; முதல்-அமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 24 Oct 2018 11:15 PM GMT (Updated: 24 Oct 2018 8:53 PM GMT)

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.11.2017 அன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அந்த விழாவில், “தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-19-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது.

அடிக்கல் நாட்டு விழா

இதைத்தொடர்ந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

அதேநேரத்தில் திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Next Story