பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் இனிமேல் பிடிக்கக்கூடாது உயர் அதிகாரி சுற்றறிக்கை


பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் இனிமேல் பிடிக்கக்கூடாது உயர் அதிகாரி சுற்றறிக்கை
x
தினத்தந்தி 25 Oct 2018 9:15 PM GMT (Updated: 25 Oct 2018 7:47 PM GMT)

பாம்பைப் பிடிக்க தீயணைப்பு வீரர்கள் முன்வரக்கூடாது என்று உயர் அதிகாரி சுற்றறிக்கை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, 

தமிழக தலைமைச் செயலகத்தில் 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை அமைந்துள்ளது. அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், 2-ம் தளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் இணைச் செயலாளர் ரவீந்திரனின் அறைக்குள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு நுழைந்தது.

இதை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் கண்டு சத்தமிட்டனர். இதுபற்றி உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அதுபற்றி வனத்துறைக்கு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர் வந்து அந்தப் பாம்பை பிடித்து ஒரு சாக்கில் போட்டு கட்டி அதை எடுத்துச் சென்றார். பாம்பைப் பிடிக்க தீயணைப்பு வீரர்கள் முன்வரக்கூடாது என்று உயர் அதிகாரி சுற்றறிக்கை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பைப் பிடிப்பதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் பாம்பை கண்டவர்கள் அதை தீயணைப்பு நிலையங்களுக்கு சொல்வதோடு, அதை பிடிக்கச் செல்வதற்கு முன்பு மக்களே அதைக் கொன்றுவிடுகின்றனர். இது தீயணைப்புத் துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

எனவே பாம்பை பிடிப்பதற்கு செல்ல வேண்டாம் என்று உயர் அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பாம்பு தவிர ஆந்தை போன்ற மற்ற உயிரினங்களை நாங்கள் பிடித்து காப்பாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story