தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்த 45 பேர் வெற்றி


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்த 45 பேர் வெற்றி
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 8:58 PM GMT)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 45 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 320 சிவில் நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

முதன்மை ஆகஸ்டு மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து செப்டம்பர் 27-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை நேர்முகத்தேர்வு நடந்தது. இந்த நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் கடந்த 5-ந்தேதியே வெளியானது.

மனிதநேய மையம்

அந்தவகையில் தற்போது 222 பேர் இந்த பதவிகளுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3 பேரின் தேர்வு முடிவுகள் சில ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

தேர்வு செய்யப்பட்டுள்ள 222 பேரில், சைதை துரைசாமியின் மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில் படித்த 45 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பேனி ராஜன் என்பவர் முதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார்.

45 பேர் தேர்வு

இந்த தேர்வுக்கான பயிற்சியை மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து மூத்த வக்கீல்கள், சட்டக்கல்வி பயிற்சியாளர்கள், முன்னாள் நீதிபதிகள் கொண்டு வழங்கியது.

அதோடு மட்டுமில்லாமல், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு பயிற்சி வகுப்புகள், மாதிரி நேர்முகத்தேர்வுகளும் வழங்கப்பட்டன.

மனிதநேய மையம் நடத்திய பயிற்சிகளில் இப்போது தேர்வாகி உள்ள 45 பேருடன் சேர்த்து இதுவரை 145 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்று நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர்.

மேற்கண்ட தகவலை மனிதநேய மையத்தின் இயக்குனர் ம.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story