தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை வருமா?


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை வருமா?
x
தினத்தந்தி 25 Oct 2018 11:30 PM GMT (Updated: 25 Oct 2018 9:31 PM GMT)

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தகுதி இழப்புக்கு ஆளாக்குகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை,

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று ஐகோர்ட்டு நீதிபதி எம்.சத்திய நாராயணன் தீர்ப்புகூறி உள்ளார். இந்த தீர்ப்பு அந்த எம்.எல்.ஏ.க்களை அடுத்த தேர்தலில் போட்டியிட தகுதி இழப்புக்கு ஆளாக்குகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்களை எந்தெந்த குற்றங்களின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பதை அரசியலமைப்பு சாசனத்தின் 191 (1) (2) உட்பிரிவு கூறுகிறது. ஆனால் இந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கு நேரிட்டுள்ள நிலையை ஆராய்ந்தால், அவர்களை அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட தடை செய்வதற்கான நேரடி சட்டங்களோ, சட்டப்பிரிவுகளோ இல்லை என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் இதுபோன்ற நிலைக்குள்ளான எம்.எல்.ஏ.க்கள் யாரையும் தேர்தலில் போட்டியிட தகுதி இழப்புக்கு ஆளாக்கிய நிகழ்வு இதுவரை நடக்கவில்லை. எனவே இதில் விவாதங்கள் எழும்ப வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கேட்டபோது, “அந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அடுத்த தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கக்கூடிய நேரடி சட்டங்கள் கிடையாது. எனவே அவர்கள் சட்டமன்றம் உள்பட எந்த தேர்தலிலும் போட்டியிடமுடியும்” என்று தெரிவித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை செயலாளர் ஒருவரும் இதே கருத்தையே கூறினார்.

Next Story