டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 27 Oct 2018 8:17 PM GMT (Updated: 27 Oct 2018 8:17 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,  

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப்-1 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் ஓராண்டுக்கு மேலாகியும் வெளியிடப்படவில்லை. மிக முக்கியமான போட்டி தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய குரூப்-1 தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்ததையும், அத்தேர்வில் விடைத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டதையும் கடந்த ஆண்டு நான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். அதன்தொடர்ச்சியாக அந்த முறைகேடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த விசாரணையில் தேர்வாணைய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முறைகேடு செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டால் அதுவும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதால் தான் முடிவுகளை வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

வெளியிட வேண்டும்

சர்ச்சைக் குரிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியிட்டது. அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்ற முதல் நிலைத்தேர்வை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் 4,602 பேர் முதன்மைத்தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீதான நம்பிக்கை தகர்ந்து விடும்.

ஒவ்வொரு முறையும் போட்டித்தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போதே, அத்தேர்வுகளின் பல கட்ட தேர்வு நடைபெறும் தேதியும், முடிவு வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக 2016-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை ஒரு வாரத்திற்குள் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story