வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு மனைவியுடன் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு மனைவியுடன் கைது
x
தினத்தந்தி 27 Oct 2018 9:15 PM GMT (Updated: 27 Oct 2018 8:29 PM GMT)

ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டின் பெயர் கோவிந்தன் (வயது 65). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர். போலீஸ் ஏட்டு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்தார். இவரது மனைவி பெயர் மரியத்தாய் (55).

இவரது மகள் கிருஷ்ணகோகிலா (26). மருமகன் அருண்குமார் (33). இவர்கள் மீது சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்மனு ஒன்றை கொடுத்தார்.

ரூ.1¼ கோடி மோசடி

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு கோவிந்தன் தனது மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்டார். நானும், மத்திய அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பணம் கொடுத்தேன்.

சுமார் 35 பேரிடம் ரூ.1¼ கோடி பணம் வசூல் செய்துவிட்டு, யாருக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

கைது

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு கோவிந்தனும், அவருடைய மனைவி மரியத்தாயும் நேற்று கைது செய்யப்பட்டனர். கோவிந்தனின் மகள் கிருஷ்ணகோகிலாவையும், மருமகன் அருண்குமாரையும் தேடி வருவதாக போலீசார் கூறினார்கள்.

Next Story