வளர்ந்து வரும் நட்சத்திரம் விருது: தமிழிசை சவுந்தரராஜன் அமெரிக்கா செல்கிறார்


வளர்ந்து வரும் நட்சத்திரம் விருது: தமிழிசை சவுந்தரராஜன் அமெரிக்கா செல்கிறார்
x
தினத்தந்தி 27 Oct 2018 10:15 PM GMT (Updated: 27 Oct 2018 9:04 PM GMT)

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

சென்னை,

அமெரிக்க நாட்டின் பிரபல அமைப்பான பன்னாட்டு கலாசார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் இந்த ஆண்டிற்கான சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியல், மருத்துவம், சமூக சேவைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய பெண் தலைவர் என்ற பிரிவில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதை பெறுவதற்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு, சிகாகோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். நவம்பர் 3-ந்தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிகாகோ நகரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறேன். அதனை தொடர்ந்து தமிழ் சங்கங்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கான கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

Next Story