ஜனவரி 8, 9-ந் தேதிகளில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க வேலை நிறுத்தத்துக்கு சி.ஐ.டி.யு. ஆதரவு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி


ஜனவரி 8, 9-ந் தேதிகளில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க வேலை நிறுத்தத்துக்கு சி.ஐ.டி.யு. ஆதரவு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2018 9:45 PM GMT (Updated: 27 Oct 2018 9:10 PM GMT)

ஜனவரி 8, 9-ந் தேதிகளில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க வேலை நிறுத்தத்துக்கு சி.ஐ.டி.யு. ஆதரவளிப்பதாக மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று காலை சி.ஐ.டி.யு. மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.ஐ.டி.யு. ஆதரவு

ஜனவரி மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்களும் விடுத்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக மாநிலம் முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

ஒப்பந்தமுறை ஒழிப்பு, சமவேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், சட்டங்கள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதை வெற்றிகரமாக நடத்துவோம்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

யமஹா, ராயல் என்பீல்ட், எம்.எஸ்.ஐ. ஆகிய தொழிற்சாலைகளில் சங்கம் அமைத்ததற்காக பழிவாங்கப்பட்டதை எதிர்த்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 45 நாட்களுக்கும் மேலாக இந்த வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசின் அறிவுரையை நிர்வாகங்கள் ஏற்க மறுத்ததால் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

காத்திருப்பு போராட்டம்

இது சம்பந்தமாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் விளக்க கூட்டங்களும், 2-ந் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும்.

இதில் பிரச்சினை தீராவிட்டால் நவம்பர் முதல் வாரத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்சாலைகளிலும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கால் டாக்சி டிரைவர்கள்

சுற்றுப்புற சூழலை மனதில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம். அதேநேரம் இதை கோர்ட்டு மறுபரிசீலனை செய்து 2 மணிநேரம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்.

வருகிற 29-ந்தேதி கால் டாக்சி டிரைவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு தங்கள் வாகனங்களோடு ஒரு காத்திருப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்.

நவம்பர் 27-ந் தேதி நடைபெறும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கும் சி.ஐ.டி.யு. ஆதரவளிக்கிறது. அதற்கு முன்னதாக அவர்களின் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story