அமைச்சர் ஜெயக்குமார் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அ.ம.மு.க. நிர்வாகி கைது


அமைச்சர் ஜெயக்குமார் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அ.ம.மு.க. நிர்வாகி கைது
x
தினத்தந்தி 27 Oct 2018 10:45 PM GMT (Updated: 27 Oct 2018 9:47 PM GMT)

சேலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சேலம் அ.ம.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இவரது உருவப்படத்தை ஆபாச படத்துடன் இணைத்து அதை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. வினர் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆபாச படத்துடன் சித்தரித்து வெளியிட்டவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அ.ம.மு.க. நிர்வாகி கைது

இதில், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாராபுரத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 38) என்பவர் தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் நேற்று தாராபுரத்திற்கு சென்று வீட்டில் இருந்த ரங்கநாதனை கைது செய்தனர்.

பின்னர், அவரை சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் அமைச்சர் ஜெயக்குமாரின் படத்தை, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான ரங்கநாதன், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சேலம் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story