கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க தடை பண்ணையாளர்கள் சங்கம் எதிர்ப்பு


கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க தடை பண்ணையாளர்கள் சங்கம் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Oct 2018 8:42 PM GMT (Updated: 28 Oct 2018 8:42 PM GMT)

கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான பண்ணைகளில் கோழிகள் கூண்டில் அடைத்தே வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒருசில பண்ணைகளில் மட்டுமே புறக்கடை முறையில் திறந்தவெளியில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தன்னார்வ அமைப்பு தொடுத்த வழக்கு ஒன்றில் சுப்ரீம்கோர்ட்டு கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க இடைக் கால தடை விதித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் கூடுதல் இயக்குனர் க.மகேஸ்வரன், கால்நடை பராமரிப்பு துறையின் அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

எந்தவொரு புதிய கோழி பண்ணைகளோ அது தொடர்பான அமைப்புகளோ, பேட்டரி மூலம் இயங்கும் கூண்டுகளை உபயோகிக்காமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் இந்த இடைக்கால உத்தரவை பின்பற்றும் வகையில், முட்டைக்கோழிகள் வளர்க்கும் கோழிப்பண்ணையாளர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் நகல் அனுப்பப்படுகிறது.

இதற்கு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சின்ராஜ் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டின் இந்த இடைக்கால தடை புதிதாக கோழிப்பண்ணை தொடங்கும் நபர்களுக்கு மட்டும் இன்றி ஏற்கனவே கோழிப்பண்ணை நடத்தும் நபர்களுக்கும் பொருந்தும் என்றால், கோழிப்பண்ணை தொழிலை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.

இதனால் முட்டை உற்பத்தி கடுமையாக சரிவடைந்து, அதன் விலை ‘கிடுகிடு’ என உயரும். எனவே முட்டை விலை உயர்வை சமாளிக்க முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி, அதன் காரணமாக நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறையும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து, தற்போது கோழிகளை கூண்டில் அடைத்து சுகாதாரமான முறையில் முட்டைகளை உற்பத்தி செய்வது போலவே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story