பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
x
தினத்தந்தி 5 Nov 2018 6:29 PM GMT (Updated: 5 Nov 2018 6:29 PM GMT)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டபோதும், இக்கொடூர குற்றத்தை செய்த நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி நடவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்தியதாக செய்திகள் வந்தபோது, அதற்கு கடும் கண்டனங்கள் எழும்பிய பிறகுதான் வேறு வழியின்றி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

போதுமான சட்டங்கள் இருந்தும்கூட, சட்டத்தை செயல்படுத்தக்கூடிய மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை மிகவும் மேம்போக்காக கையாளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story