ஈஞ்சம்பாக்கத்தில் வகுப்பறையில் போதை பொருள்; 24 மாணவர்கள் மீது நடவடிக்கை


ஈஞ்சம்பாக்கத்தில் வகுப்பறையில் போதை பொருள்; 24 மாணவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 7:20 PM GMT)

வகுப்பறையில் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதால் 24 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து, தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் 12-ம் வகுப்பு அறையில் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அங்கு குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்த பிளாஸ்டிக் பையை கண்டெடுத்த அவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

அந்த போதை பொருள், வகுப்பறைக்குள் வந்தது எப்படி? என அந்த வகுப்பறை மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆனால் மாணவர்கள் யாரும் அதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து பள்ளி நிர்வாகம், பெற்றோரை அழைத்து வரும்படிகூறி அந்த வகுப்பறை மாணவர்கள் 24 பேரையும் வெளியேற்றியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் 24 பேரும் தங்கள் பெற்றோரை அழைத்து வராமல் நேற்று பள்ளிக்கு வந்தனர். இதனால் அவர்களை வகுப்பறைக்கு செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதிக்காமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் எடுத்த இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அவர்களின் பெற்றோர், தனியார் பள்ளியை முற்றுகையிட்டனர். யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்தமாக மாணவர்களை வெளியேற்றுவது நியாயமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த நீலாங்கரை போலீசார், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரிடம் சமரசம் பேசினர். அப்போது பள்ளி நிர்வாகம், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என மாணவர்கள் எழுதி கொடுத்தால் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிப்போம் என்று தெரிவித்தது. இதையடுத்து பெற்றோரை போலீசார் சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர்.

Next Story