பா.ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி சென்னையில் சந்திரபாபு நாயுடு ஆலோசனை


பா.ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி  சென்னையில் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
x
தினத்தந்தி 10 Nov 2018 12:15 AM GMT (Updated: 9 Nov 2018 10:37 PM GMT)

பாரதீய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் சந்திரபாபு நாயுடு, சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான உத்திகளை ஆளும் பாரதீய ஜனதா இப்போதே வகுத்து வருகிறது.

அதே சமயம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்றவற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்திவிட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் மிகவும் தீவிரமாக உள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதில் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முக்கிய பங்கு வகிக்கிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய அவர், அந்த கட்சிக்கு எதிராக வலுவான புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

அந்த வகையில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒருமித்த கருத்து கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக சமீபத்தில் டெல்லி சென்ற அவர், அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் பெங்களூரு சென்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடா, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு நேற்று சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதற்காக விஜயவாடாவில் இருந்து தனி விமானத்தில் மாலை 6.45 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருடன் தெலுங்குதேசம் கட்சியின் ஆந்திர மாநில தலைவரும், மின் துறை மந்திரியுமான கலா வெங்கட்ராவ், நிதி மந்திரி எனமால ராமகிருஷ்ணுடு, சமூக நலத்துறை மந்திரி நாக்க ஆனந்தபாபு, தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி லோகேஷ், சி.எம்.ரமேஷ் எம்.பி. ஆகியோர் வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர்கள் சரியாக இரவு 7.20 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தை வந்தடைந்தனர்.

அங்கு சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் வாயிலில் வந்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். சந்திரபாபு நாயுடுவும் மு.க.ஸ்டாலினுக்கு பூச்செண்டு கொடுத்து சால்வை அணிவித்தார். பெருமாள் சிலை ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மு.க.ஸ்டாலின், அவருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர், அங்குள்ள அறையில் மு.க.ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

“பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலி னிடம் கேட்டுக்கொண்டார்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனை முடிந்தவுடன், மு.க.ஸ்டாலின் இல்லத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அதன் பிறகு, இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் மக்கள் விரோத, தேச விரோத, மத சார்பற்ற நிலைக்கு விரோதமாக மோடி தலைமையில் நடந்து கொண்டு இருக்கக்கூடிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை இது சம்பந்தமாக அவர் சந்தித்து இருக்கிறார். அப்படி அவர் சந்திக்கும் நேரத்தில் மனப்பூர்வமாக தி.மு.க. சார்பில் வரவேற்று அறிக்கை வெளியிட்டேன்.

ஏற்கனவே மாநில உரிமைகள், மோடியின் ஆட்சியில் முழுமையாக பறிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் நடைபெற்றுக்கொண்டு இருக்கக்கூடிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறேன்.

நீதிமன்றமாக இருந்தாலும் சரி, சி.பி.ஐ.யாக இருந்தாலும் சரி, ரிசர்வ் வங்கியாக இருந்தாலும் சரி அந்த அமைப்புகள் எல்லாம் சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல் படக்கூடிய அமைப்புகள் ஆகும். அந்த அமைப்புகளை கூட மிரட்டுகின்ற, அச்சுறுத்துகின்ற நிலையில் தான் மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

எனவே, இதை தடுத்தாக வேண்டும் என்று சொன்னால் உடனடியாக பா.ஜ.க. ஆட்சியை அகற்றுகிற முயற்சியில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களின் தலைவர்களும், முதல்-மந்திரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு சந்திரபாபு நாயுடு அந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு தி.மு.க. ஆதரவு வேண்டும் என்று என்னை நேரடியாக சந்தித்து கேட்டு இருக்கிறார். நான் மனப்பூர்வமாக ஆதரவு தருவதாக உறுதி தந்திருக்கிறேன். வர இருக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைவில் டெல்லியிலோ அல்லது வேறு வசதியாக இருக்கக்கூடிய மாநிலங்களிலோ எல்லா தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி அதன் மூலம் படிப்படியாக என்னென்ன பணிகளில் எப்படிப்பட்ட நிலைகளில் ஈடுபடலாம் என்பது பற்றி விவாதிக்க இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அந்த கூட்டத்துக்கு வருவதாக நான் ஒப்புதல் தந்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதாவது வகுக்கப்பட்டு இருக்கிறதா?

பதில்:- அது அடுத்தடுத்து வரும் கூட்டங்களில் பேசப்படக்கூடிய ஒன்று. நிச்சயமாக அது இருக்கும். ஏற்கனவே தலைவர் கருணாநிதி இதுபோன்ற சூழ்நிலையிலே குறைந்தபட்ச திட்டம் என்ற அடிப்படையில் தான் கூட்டணிகள் அமைத்து இருக்கிறார். நிச்சயமாக இருக்கும். அதில் எள்ளளவும் சந்தேகம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

கேள்வி:- இப்போது எவ்வளவு கட்சிகள் இருக்கிறார்கள்?

பதில்:- இனிமேல் தான் தெரியும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, இரவு 8.45 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு காரில் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

Next Story