ரெயிலில் பிடிபட்டது நாய்க்கறியா? முகவர் கைது; தனிப்படை ஜோத்பூர் விரைந்தது பரபரப்பு தகவல்கள்


ரெயிலில் பிடிபட்டது நாய்க்கறியா? முகவர் கைது; தனிப்படை ஜோத்பூர் விரைந்தது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 21 Nov 2018 8:45 PM GMT (Updated: 21 Nov 2018 8:17 PM GMT)

சென்னை எழும்பூரில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முகவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னை எழும்பூரில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முகவர் கைது செய்யப்பட்டார். மீன் அனுப்புவதாக கூறி இறைச்சியை அனுப்பியவர்களை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் ஜோத்பூருக்கு விரைந்தனர்.

நாய்க்கறி பீதி

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி, ராஜஸ்தானில் இருந்து வந்த ரெயிலில் 2 ஆயிரத்து 190 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய் இறைச்சி என்று கூறப்பட்டது. இது சென்னை மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த கெட்டுப்போன இறைச்சி ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே வாரியம் சார்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. ஆனால் இந்த இறைச்சியை அனுப்பியவரின் பெயரும், அது சென்று சேரவேண்டிய முகவரியும் தெளிவாக குறிப்பிடாததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து ரெயில்வே ரெயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்.) கமிஷனர் எஸ்.லூயிஸ் அமுதன் கூறியதாவது:-

முகவர் கைது

ரெயில்வே பாதுகாப்பு சட்டங்கள் 163 மற்றும் 145(பி) பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெயிலில் அனுப்பப்பட்ட இறைச்சியை பெறுவதாக இருந்த முகவர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முகவர் கணேசன் என்பவரை தேடி வருகிறோம்.

இந்த இறைச்சியை அனுப்பியவரை கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் வி.மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் ஜோத்பூர் விரைந்துள்ளனர்.

ரெயிலில் வந்த இறைச்சி நாய்க்கறியா, இல்லையா? என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் தீர்மானமாக சொல்லிவிட முடியாது.

மீன் பெயரில் பார்சல்

பார்சலை அனுப்பும்போது எங்கே இருந்து அந்த பார்சல் வருகிறதோ, அங்கு உள்ள ‘பார்சல்’ அதிகாரிகள் அதை சோதனை செய்து அனுப்பியிருக்க வேண்டும். ஜோத்பூரில் இது ஏன் சோதித்து பார்க்கப்படவில்லை? என்பது குறித்து விசாரிக்கப்படும்.

மேலும் ஜோத்பூரில் இருந்து மீன் என்று கூறி தான் இந்த இறைச்சியை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதுவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பொய் சொல்லி ‘புக்’ செய்தது யார்? என்பதை ஜோத்பூர் சென்ற பிறகு போலீசார் உறுதி செய்வார்கள். தவறான பெயரில் உணவுப் பொருட்களை அனுப்புதல் தொடர்பான சட்டப்பிரிவில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓரிரு நாளில் முடிவு

கெட்டுப்போன இறைச்சியின் மாதிரிகள் சென்னை எழும்பூர் கால்நடை மருத்துவக்கல்லூரியில் அனுப்பப்பட்டு, தீவிர பரிசோதனை நடந்து வருகிறது. நேற்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஆய்வுக்கூடம் இயங்கவில்லை. அத்துடன் முடிவும் கிடைக்கவில்லை.

எனவே இன்னும் ஓரிரு நாளில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி நாயினுடையதா? இல்லையா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்காக சென்னை மக்களே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Next Story