பா.ஜ.க.வுக்கு எதிரான சந்திரபாபு நாயுடு கூட்டணி தோல்வியில் முடியும் சென்னையில் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி


பா.ஜ.க.வுக்கு எதிரான சந்திரபாபு நாயுடு கூட்டணி தோல்வியில் முடியும் சென்னையில் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 9:01 PM GMT)

பா.ஜ.க.வுக்கு எதிரான சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைக்கும் கூட்டணி தோல்வியில் முடியும் என்று சென்னையில் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

சென்னை, 

பா.ஜ.க.வுக்கு எதிரான சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைக்கும் கூட்டணி தோல்வியில் முடியும் என்று சென்னையில் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தென் மாநிலங்கள்

ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வட இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகளின் ஆதிக்கமே மத்தியில் இருக்கிறது. நம்பிக்கையோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., தெலுங்குதேசம் கட்சி கூட்டணிக்கு வாக்கு சேகரித்தேன். ஆனால் அவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்கள்.

அடுத்த ஆண்டு கூட்டணி ஆட்சி தான் மத்தியில் அமையும். இதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். இதற்காக நமக்கென்று ஒரு பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் வகையில் தென் மாநில மக்களையும், கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

தோல்வியில் முடியும்

தேசிய கட்சிகள் தென் மாநிலங்களுக்கான தேவைகளை உணரவேண்டும். திராவிட நாடு என்னுடைய கோரிக்கை இல்லை. ஆனால் திராவிட கலாசாரத்தை பாதுகாத்து அதற்கு மதிப்பளிக்கவேண்டும். தென் இந்தியாவிற்கு என ஒரு தலைநகர் வேண்டும். ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகிவிட்டது. அவரது மகனை அரசியல் வாரிசாகவும், இதுவரை பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிடாத ஒருவரை பஞ்சாயத்து அமைச்சராகவும் நியமித்து உள்ளார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைக்கும் கூட்டணி சந்தர்ப்பவாதமானது. சந்திரபாபு நாயுடுவை நம்பி சென்றால் அவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். பா.ஜ.க., காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி ஒன்று உருவாகவேண்டும். அதற்கு தான் நான் முயற்சித்து வருகிறேன். ஆந்திரா, தெலுங் கானாவில் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். ஆந்திராவில் வெற்றி பெற்று நான் முதல்-அமைச்சர் ஆவேன்.

ஒருங்கிணைக்கும் முயற்சி

தேவை ஏற்பட்டால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவேன். ஆந்திராவிற்கு சந்திரபாபு நாயுடு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார். அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை காட்டியவுடன் அமைதியாகிவிடுகிறார். இது போன்ற தலைவர்கள் இருந்தால் தென் மாநிலங்களுக்கான தேவையை பெற முடியாது. மத்திய அரசுக்கு அடி பணியாமல் தமிழக அரசு சுயமரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக ஏற்கனவே சந்திரபாபு நாயுடு 3-வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் அதே மாநிலத்தை சேர்ந்த பவன் கல்யாண் தென் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story